கிடப்பில் போடப்பட்ட பணியால் வாகன ஓட்டிகள் கடும் அவதி


கிடப்பில் போடப்பட்ட பணியால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
x

கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய பள்ளம் தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்ட பணியால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்து அபாயம் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரியலூர்

கோடை மழை

அரியலூர் நகரின் முக்கிய பகுதியாக விளங்குவது தேரடி பகுதியாகும். இப்பகுதியில் தான் நகரின் முக்கிய ஜவுளிக்கடைகள், இனிப்பு கடைகள் உள்பட ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், திட்டக்குடி, கொளக்காநத்தம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் இவ்வழியாக செல்வது வழக்கம். இப்பகுதி வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ் செல்லும் பாதையாகவும் உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் கடந்த மாதம் 19, 20-ந்தேதிகளில் பெய்த திடீர் கோடை மழையால் தேரடியில் நகராட்சியால் அமைக்கப்பட்டு இருந்த கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அருகில் இருந்த கடைகளிலும் கழிவுநீர் புகுந்தது.

போக்குவரத்துக்கு இடையூறு

இதனையடுத்து நகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை சரி செய்ய வேண்டி பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி கழிவுநீர் செல்வதற்கான வழியை ஏற்படுத்தினர். கழிவுநீர் செல்வதற்கான வழியை ஏற்படுத்திய நகராட்சி ஊழியர்கள் கழிவுநீர் கால்வாயில் இருந்து எடுத்த கற்கள் மற்றும் மண்ணை சாலையிலேயே போட்டுள்ளனர். இதனால் கழிவுநீர் செல்ல வழி கிடைத்தது. ஆனால் பொதுமக்கள் மற்றும் பஸ்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சாலையில் கற்கள் மற்றும் மண்ணை அப்புறப்படுத்தாமல் உள்ளதால் பஸ் செல்லும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. சில நேரங்களில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்சுகள் இதில் மாட்டிக்கொள்ளும் சூழலும் உள்ளது. இதனால் ஏற்படும் இடையூறுகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-

மோசமான சூழ்நிலை

முனியங்குறிச்சியை சேர்ந்த அருள்ராஜா:- தோண்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் பகுதியை இதுநாள் வரை சரி செய்யாமல் பெயரளவிற்கு தடுப்புகளை அமைத்துள்ளனர். சில இருசக்கர வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்கும்போது, எதிர்பாராத விதமாக கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்து விபத்துகள் ஏற்படும் மோசமான சூழல் உள்ளது. இதற்கான நிரந்தர தீர்வு இதுவரை எடுக்கப்படவில்லை. மேலும் தேரடி பகுதி வளைவு பகுதி என்பதால் இவ்வழியே வெளியூருக்கு செல்லும் பஸ்கள், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள், விபத்தில் அடிபட்ட நபர்களை அழைத்து செல்லும் 108 ஆம்புலன்ஸ் என அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமலும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு மோசமான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் சில சமயங்களில் தேரடி பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும்.

சுகாதாரம் பாதிக்கப்படும்

அரியலூரை சேர்ந்த சந்திரசேகர்:- பொதுவாக கழிவுநீரால் பொது சுகாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு இதனை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை சரி செய்யப்படவில்லை. நகராட்சியில் நிதி நிலைமை சரியாக இல்லை என்று கூறுவார்கள். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் 95 சதவீதம் நகராட்சி வரி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இனிமேலாவது இந்த கழிவுநீர் வாய்க்காலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு

பள்ளகாவேரியை சேர்ந்த சங்கர்:- அரியலூர் நகராட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக தேரடி கடைவீதி உள்ளது. ஆனால் இந்த கடைவீதியில் மழை பெய்யும்போது வடிகால் வழியாக கழிவுநீர் செல்ல முடியாமல் சாலையிலேயே செல்கின்றது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் கழிவுநீர் புகுந்து விடுகிறது. இதன்காரணமாக இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால் கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வாரி பராமரிப்பதுடன், வாய்க்கால் இல்லாத பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் வசதிகளை உருவாக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

விபத்து ஏற்படும் அபாயம்

மணலேரியை சேர்ந்த செங்கமுத்து:- தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் காலை பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் இந்த சாலையை கடந்து செல்லும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சிலர் இந்த பள்ளத்தில் வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாய நிலையும் உள்ளது. எனவே பெரிய அளவிலான விபத்துகள் நடைபெறும் முன்பு இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரியலூர் நகர பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்த வேண்டும். குப்பைகளை அப்புறப்படுத்தவில்லை என்றால் மழை பெய்யும்போது குப்பைகள் கழிவுநீர் கால்வாயில் அடித்துச்செல்லப்பட்டு இதுபோன்ற நிலைமை தொடர அதிக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பணி குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்பதற்காக தொலைபேசி மூலம் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story