வாகன ஓட்டிகள் கோரிக்கை
மழை வெள்ளத்தில் சேதமடைய வாய்ப்பு உள்ளதால் தற்காலிக பாலத்தை உயர்த்தி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை வெள்ளத்தில் சேதமடைய வாய்ப்பு உள்ளதால் தற்காலிக பாலத்தை உயர்த்தி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலம் இடித்து அகற்றம்
கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் ஊராட்சி கடுவையாற்றின் குறுக்கே போக்குவரத்து பாலம் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக திருத்துறைப்பூண்டி, திருக்குவளை, எட்டுக்குடி மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் தினமும் மோட்டார் சைக்கிள், 4 சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், பள்ளி- கல்லூரி வாகனங்களில் மாணவ- மாணவிகள் சென்று கொண்டிருந்தனர். இந்த பாலம் பழுதடைந்த காரணத்தால் பொதுப்பணித்துறை மூலம் கடந்த மார்ச் 29-ந்தேதி முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது.
இதையடுத்து ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் கீழ்வேளூரில் இருந்து பஸ், கனரக வாகனங்கள் ராதாமங்கலம், இருக்கை கிராமம் வழியாக மாற்று பாதையில் 7 கி.மீட்டர் .சுற்றி வந்து தேவூர் மெயின் சாலை வழியாக அனைத்து ஊர்களுக்கும் சென்று வருகின்றன.
தற்காலிக பாலம் அமைப்பு
இந்தநிலையில் இடிக்கப்பட்ட பாலத்தின் அருகே கடுவையாற்றின் குறுக்கே தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியே இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வர முடியும். 4 சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களில் பயணம் செய்பவர்கள் இருக்கை, ராதாமங்கலம் ஆகிய ஊர்கள் வழியாக செல்வதால் அந்த சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
உயர்த்தி அமைக்க வேண்டும்
தற்காலிக பாலம் கடுவையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளதால் வருகிற அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் கனமழையால் அதிக அளவில் தண்ணீர் வரத்து வரும் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி மழை வெள்ளத்தில் சேதமடைய வாய்ப்பு உள்ளதால் தற்காலிக பாலத்தை உயர்த்தி அமைத்து தர வேண்டும். மேலும் தற்காலிக பாலத்தில் 4 சக்கர வாகனங்கள் பயணம் செய்யும் வகையில் அமைக்க வேண்டும். மழைக்காலம் தொடங்குவதற்குள் இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 சக்கர வாகனங்கள் செல்லும் வகையில்
இதுகுறித்து தேவூர் ஊராட்சியை சேர்ந்த விஜேயந்திரன்: தற்காலிக பாலம் கடுவையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளதால் மழைகாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக பாலம் சேதமடைவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே தற்காலிக பாலம் அமைந்துள்ள பகுதியில் இரும்பு பைப்புகளை கொண்டு பாலத்தை உயர்த்தி அமைக்க வேண்டும் என்றார்.
தேவூர் ஊராட்சியை சேர்ந்த அப்துல் ரஹீம்: தற்காலிக பாலம் அமைக்கும் போது அதில் 4 சக்கர வாகனங்கள் செல்லும் விதமாக அமைத்து தர வலியுறுத்தினோம், ஆனால் அதுபோன்று அமைக்கப்படவில்லை. எனவே தற்காலிக பாலத்தில் 4 சக்கர வாகனங்களும் பயணம் செய்யும் வகையில் தற்காலிக பாலத்தை உயர்த்தி அமைத்து தர வேண்டும் என்றார்.