குடியாத்தம் நகரில் 3 மணிநேரம் நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்
கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குடியாத்தம் நகரில் 3 மணி நேரம் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குடியாத்தம் நகரில் 3 மணி நேரம் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
வெள்ளப்பெருக்கு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் நடுவே கவுண்டன்ய மகாநதி ஆறு செல்கிறது. ஆற்றை கடந்து செல்ல காமராஜர் பாலமும் மற்றொரு தரைப்பாலமும் உள்ளது. இதன் வழியாகத்தான் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வருகின்றனர். தொடர் மழை காரணமாக மோர்தானா அணை நிரம்பி கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் ஆற்றில் தண்ணீர் செல்லும் போது காமராஜர் பாலத்தில் போக்கு வவத்து நெரிசல் ஏற்பட்டு மணிக்கணக்கில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே கெங்கையம்மன் கோவில் தரைப் பாலத்தை மேம்பாலமாக மாற்றினால் ஆற்றில் வெள்ளம் சென்றாலும் போக்குவரத்துக்கு நெரிசல் இல்லாமல் இருக்கும் என பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
தற்போது கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 800 கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் செல்வதால் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் காமராஜர் பாலம் வழியாக மட்டுமே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நேற்று காலை சுமார் 8.15 மணி அளவில் திடீரென குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி பழைய பஸ் நிலையம், அர்ஜுனன்முதலி தெரு, பெரியார் சிலை, காமராஜர் பாலம், தாழையாத்தம் பஜார், சந்தப்பேட்டை பஜார், பேரணாம்பட்டு ரோடு, காந்திசவுக்கு, சேம்பள்ளி கூட்ரோடு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் குடியாத்தம் நகரமே ஸ்தம்பித்தது.
3 மணி நேரம்
இதன் காரணமாக காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் என பலதரப்பு மக்களும் அவதியுற்றனர. நேற்று முகூர்த்த நாள் நாள் என்பதால் குடியாத்தம் பகுதியில் வரலாறு காணாத அளவு நெரிசல் ஏற்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கி ஒரு மணி நேரத்திற்கு பிறகு சென்றது.
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. பின்னர் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி காமராஜர் பாலம் அருகே சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னரே போக்குவரத்து சீரடைந்தது. இதனால் வாகன ஓட்டிகளும், கனரக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஏராளமான மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் வீடு திரும்பினர்.
மேம்பாலம் கட்ட வேண்டும்
காவல்துறை அதிகாரிகள் குடியாத்தத்தில் மழைக்காலங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிக அளவு போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோன்று தமிழக அரசு உடனடியாக கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.