சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்-இருவழி மேம்பாலமாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை


சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்-இருவழி மேம்பாலமாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
x

சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கின்றனர். அங்கு இருவழி மேம்பாலம் அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்

போக்குவரத்து நெரிசல்

தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக சேலம் விளங்குகிறது. சேலம் மாநகரில் பொதுமக்கள் பயன்படுத்தும் கார், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. முக்கிய இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கந்தம்பட்டி, திருவாக்கவுண்டனூர், ஏ.வி.ஆர். ரவுண்டானா, 5 ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தால் அங்கு எப்போது பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சேலம் மாநகரின் உள்ளே வர நுழைவு வாயிலாக சீலநாயக்கன்பட்டி மேம்பாலம் உள்ளது. நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை பகுதிகளில் இருந்து வரும் சாலையும், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, சென்னை செல்லும் சாலையும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு செல்லும் சாலையும், சேலம் நகருக்குள் வரும் சாலையும் சீலநாயக்கன்பட்டியில் சந்திக்கின்றன. இங்கு நாளுக்கு நாள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர்.

அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

கோவையில் இருந்து சென்னை செல்பவர்கள் பாலத்தின் மேலே ஏறி எளிதில் சீலநாயக்கன்பட்டியை கடந்து சென்று விடுகின்றனர். ஆனால் சென்னையில் இருந்து கோவை செல்பவர்கள் பாலத்தின் அடியில் சென்று, நாமக்கல் - சேலம் சாலையில் நின்று கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது. குறிப்பாக காலை மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்லும் பஸ்கள், திருவிழா, முகூர்த்த நாட்களில் பல கிலோமீட்டர் தொலைவில் வாகனங்கள் நின்று, மணிக்கணக்கில் காத்திருந்து செல்ல வேண்டி இருக்கிறது.

இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளும் உள்ளூர்வாசிகள் டவுனுக்கு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. சீலநாயக்கன்பட்டி மேம்பாலம் கட்டும்போதே கோவை - சென்னை, சென்னை - கோவை என இருவழிகளிலும் திட்டமிட்டு மேம்பாலம் கட்டியிருந்தால் இன்று மக்கள் இவ்வளவு அவதிப்பட வேண்டியிருக்காது. எனவே, மேம்பாலம் கட்டியிருந்தும் பொதுமக்கள் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனால் சீலநாயக்கன்பட்டி மேம்பாலத்தை இருவழி மேம்பாலமாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இருவழிப்பாதையாக...

இதுகுறித்து சேலம் லைன்மேட்டை சேர்ந்த ரவி கூறுகையில், நான் உறவினர்களை பார்க்கவும், வேலை விஷயமாகவும் நாமக்கல், திருச்சிக்கு அடிக்கடி செல்வது வழக்கம். ஆனால் அவசரமாக செல்லும்போது சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே சீலநாயக்கன்பட்டி மேம்பாலம் திட்டமிடாமல் கட்டப்பட்டுள்ளது. ஒருவழிப்பாதையாக இருப்பதால் அமைந்துள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக அமையவில்லை. சென்னையில் இருந்து கோவை செல்ல வேண்டும் என்றால் மேம்பாலத்தின் கீழ் வந்து தான் செல்ல வேண்டியுள்ளது. மேம்பாலத்தின் வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. எனவே, மேம்பாலத்தை இடித்துவிட்டு இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்றார்.

வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

இதுகுறித்து தாதகாப்பட்டியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் கூறுகையில், சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காணமுடியும். குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்தும், திருச்சி, நாமக்கல் பகுதியில் இருந்து சேலம் நகருக்குள் வரும் வாகனங்கள் கீழே செல்லாமல் மேம்பாலத்தில் செல்லும் வகையில் மேம்பாலத்தை மாற்றி அமைக்க வேண்டும். அப்போது தான் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. பொதுவாக ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அது மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். ஆனால் சீலநாயக்கன்பட்டி மேம்பாலம் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை தான் ஏற்படுத்துகிறது, என்றார்.

நீண்டநாள் கோரிக்கை

சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பூபதி கூறுகையில்,சீலநாயக்கன்பட்டி மேம்பாலத்தை வாகனங்கள் பயன்படுத்துவது இல்லை. கொண்டலாம்பட்டியில் இருந்து சென்னை மற்றும் நாமக்கல் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் மீது செல்ல வேண்டும். ஆனால் ஒருசில வாகனங்களை தவிர அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தின் கீழ் வழியாகத்தான் செல்கிறது. இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இருவழியாக வாகனங்கள் செல்லும் வகையில் மேம்பாலத்தை அமைக்க வேண்டும் என்பதே நீண்டநாள் கோரிக்கையாகும். அதை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


Next Story