ஆமை வேக பணியால் தடுமாறும் வாகன ஓட்டிகள்


ஆமை வேக பணியால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
x

ஆமை வேக பணியால் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறாா்கள். எனவே விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலை பணி துரிதப்படுத்த வேண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

விழுப்புரம்

விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பண்ருட்டி, நெய்வேலி ஆர்ச்கேட், வடலூர், சேத்தியாத்தோப்பு, கும்பகோணம் வழியாக செல்கிறது. போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலைகள் குறுகலாகவும், சாலையின் ஓரங்களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதோடு இந்த வழியில் உள்ள சாலைகளும் மிக மோசமான நிலையில் காணப்பட்டன.

4 வழிச்சாலையாக....

இதனை கருத்தில் கொண்டு விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரையிலான 165 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 4 வழிச்சாலையாக கடந்த 2006-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 2010-ம் ஆண்டில் அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையேயுள்ள சாலையையும், வழியில் உள்ள பாலங்களையும் புதிதாக அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாலும், நேரம் வீணாகுவதை கருத்தில் கொண்டும் விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையிலும் மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்தது.

3 பிரிவுகளாக பணிகள்

இதையடுத்து விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை(வி.கே.டி. சாலை) 4 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் 3 பிரிவுகளாக பிரித்து பணிகள் தொடங்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விக்கிரவாண்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு பின்னலூர் வரை 66 கி.மீ. தூரத்திற்கு ஒரு பிரிவாகவும், சேத்தியாத்தோப்பில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரை 51 கி.மீ. தூரத்திற்கு 2-வது பிரிவாகவும், சோழபுரத்தில் இருந்து தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் புறவழிச்சாலை வரை 48 கி.மீ. தூரத்திற்கு 3-வது பிரிவாகவும் பணிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான சாலை விரிவாக்க பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையே 4 வழிச்சாலை அமையும் இடங்கள் வழியாக வெள்ளியனூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சேத்தியாத்தோப்பு, அணைக்கரை, திருப்பனந்தாள், கும்பகோணம், பாபநாசம் ஆகிய முக்கிய இடங்கள் உள்ளன. இந்த பகுதிகள் வழியாக ஆறுகள் செல்லும் இடங்களில் மட்டும் 102 இடங்களிலும், சாலை பகுதிகளில் 70 இடங்களிலும் பாலங்கள் அமைகின்றன. இதுதவிர 5 இடங்களில் ரெயில்வே மேம்பாலங்களும், 2 இடங்களில் புறவழிச்சாலைகளும், 3 இடங்களில் சுங்கச்சாவடிகளும் அமைக்கப்படுகின்றன.

இந்த சாலை பணிகளை 2 ஆண்டில் அதாவது 2020-ம் ஆண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) ஒப்பந்தம் செய்தது.

ஆமைவேகத்தில்

ஆனால் இந்த 4 வழிச்சாலை பணிகள் மிகவும் மந்தமாக ஆமை வேகத்திலேயே நடந்து வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிக்கு என்.எல்.சி. நிர்வாகம் நிலக்கரி சாம்பலை இலவசமாக வழங்கியது. இந்த சாம்பலை நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு வந்து சாலையின் இருபுறங்களிலும் உள்ள பள்ளங்களில் நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது மேம்பாலங்கள், பாலங்கள், கால்வாய் பணிகள் நடைபெற்று வந்தாலும் கருங்கல் ஜல்லி, கான்கிரீட் கலவையை கொட்டி சமன் செய்தல், தார் சாலை அமைத்தல், சாலையின் நடுவே தடுப்பு அமைத்தல் ஆகிய பணிகள் ஒரு சில இடங்களில் மட்டுமே நடந்துள்ளது.

குறிப்பாக மும்பையை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் தேவையான அளவிற்கு எந்திரங்கள் இல்லை உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் விக்கிரவாண்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு பின்னலூர் வரை 4 வழிச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கோலியனூர், பஞ்சமாதேவி, சின்னக்கள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட மேம்பால பணிகள் முழுமைபெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. 4 வழிச்சாலையில் ஒரு பக்க வழிப்பாதையாவது முழுமையாக தார் சாலை அமைத்திருந்தால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்ல ஏதுவாக இருந்திருக்கும். ஆனால் இருபக்கமும் முழுமையாக சாலைகள் அமைக்காததால் குண்டும்- குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் மண் சாலையாகவே உள்ளது.

படுமோசமான சாலைகள்

மேலும் தொடர் மழை காரணமாக பழைய சாலைகள், சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் புதியதாக போடப்பட்ட தார் சாலைகள் பல இடங்களில் சேதமடைந்து குண்டும்- குழியுமாகவும், மேடும், பள்ளமுமாகவும் காட்சியளிக்கிறது. மேலும் மின்விளக்கு வசதி இல்லாமல் இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் இருக்கும் பள்ளம், மேடு தெரியாமல் தினசரி சாலை விபத்துகள் நடந்து வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்கக்கோரி பண்ருட்டியில் வியாபாரிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். தற்போது ஒரு வார காலமாக விழுப்புரம் பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருவதால் அந்த சாலைகள் மேலும் படுமோசமாகியுள்ளது. குறிப்பாக ராமையன்பாளையம், சுந்தரிப்பாளையம், வாணியம்பாளையம், சின்னக்கள்ளிப்பட்டு, கண்டரக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சாலையின் பல இடங்கள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.

விரைந்து முடிக்கப்படுமா?

இந்த 4 வழிச்சாலை பணிகளால் ஏற்கனவே சாலையை கடந்து செல்லும் வடிகால் வாய்க்கால்களும் தூர்ந்துபோய் விட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டுகளில் பெய்த மழையின்போது தண்ணீர் செல்ல வழியின்றி வயல்வெளிகளையும், குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் பார்ப்பதற்கு தீவுபோல் காட்சியளித்தது. எனவே 4 வழிச்சாலை பணிகளை சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணியை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story