போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலையில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நகரில் பஞ்சப்பள்ளி மற்றும் அஞ்செட்டி சாலை பிரியும் இடத்தில் வனத்துறை சோதனைச்சாவடி உள்ளது. அஞ்செட்டி சாலை வழியாக தான் ஒகேனக்கல்லுக்கு தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் சோதனைச்சாவடி அருகே உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டது. அதை சரி செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேற்று காலை தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலையில் குறுக்கே பொக்லைன் எந்திரத்தை நிறுத்தி குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ஆம்புலன்ஸ் வாகனம் நீண்ட நேரம் ஹாரன் ஒலித்து கொண்டே இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தேன்கனிக்கோட்டை போலீசார் பொக்லைன் எந்திரத்தை வெளியேற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.