பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி


பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
x

கூடலூர் ஜே.பி. நகரில் பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் ஜே.பி. நகரில் பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பழுதடைந்த சாலை

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டில் நடு கூடலூர் உள்பட பல பகுதிகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். நடு கூடலூர் பிள்ளையார் கோவில் வீதியில் இருந்து ஜே.பி. கார்டன் நகருக்கு தார் சாலை செல்கிறது. சில ஆண்டுகளாக தார் சாலை கற்கள் பெயர்ந்து, பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.

இந்த பழுதடைந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக பள்ளிக்கூட மாணவ- மாணவிகள், பெண்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அவசர காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகளை வாகனங்களில் ஆஸ்பத்திரிகளுக்கு வேகமாக அழைத்து செல்ல முடிவதில்லை.

சீரமைக்க கோரிக்கை

இதுகுறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

ஜே.பி.நகரில் பழுதடைந்த சாலை கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சாலை அமைப்பதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அவசர நேரத்தில் ஒரு ஆட்டோ கூட வருவதில்லை. ஆம்புலன்ஸ் வேன் பல்வேறு சிரமங்களுக் இடையே இயக்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும். இதனால் பழுதடைந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை தொடர வாய்ப்பு உள்ளது. எனவே, சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நடத்த ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story