சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
தஞ்சை சரபோஜி மார்க்கெட் அருகே சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.இதனால் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
சரபோஜிமார்க்கெட்
தஞ்சை கீழவாசலில் சரபோஜி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் மளிகை மொத்த மற்றும் சில்லறை வியாபாரம், மருந்து கடைகள் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட் அருகே அண்ணாசாலை, ஆட்டுமந்தை தெரு, கொல்லுப்பேட்டை தெரு, பாம்பாட்டி தெரு செல்லும் சாலைகள் உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் இந்த மார்க்கெட்டிற்கு தஞ்சை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனா். அதே போல் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியாக தான் அன்றாடம் சென்று வருகின்றனர். இந்த சாலை போக்குவரத்திற்கு முக்கியத்துவம் பெற்ற சாலையாகும். தற்போது இந்த சாலை சேதம் அடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து பள்ளமாக காணப்படுகிறது. இந்த பள்ளங்களில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
குளம் போல் காட்சி....
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து விடுகின்றனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், சரபோஜி மார்க்கெட் சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். இந்த சாலையின் வழியாக தான் கனரக வாகனங்கள், மார்க்கெட்டுக்கு வரும் வாகனங்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள் என ஏராமான வாகனங்கள் சென்று வருகின்றன.
ஆனால் இந்த சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த இடமே தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியவில்லை. சேதமடைந்த சாலையில் செல்லும் போது வாகனங்கள் பழுதாக வாய்ப்பும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சரபோஜி மார்க்கெட் அருகே உள்ள சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.