புகழூர் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி
புகழூர் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எனவே இப்பகுதியில் சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகழூர் ரெயில்வே கேட்
கரூர் மாவட்டம் புகழூர் பகுதி வழியாக கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே பாதை அமைக்கப்பட்டது. இந்த வழியாக கேரளா மாநிலம் பாலக்காடு, தமிழ்நாட்டில் உள்ள கோவை, ஈரோடு, பகுதியில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் ரெயில்களும், சரக்கு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரெயில்கள் அனைத்தும் புகழூர் ரெயில்வே நிலையத்தில் நின்று செல்கின்றன. அதேபோல் அருகே உள்ள புகழூர் காகித ஆலைக்கு சரக்கு ரெயில் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது.
அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
இந்தநிலையில் புகழூர் ரெயில்வே பாதை வழியாக ஏராளமான ரெயில்கள் சென்று வருவதால் புன்னம் சத்திரம்- வேலாயுதம்பாளையம், வேலாயுதம்பாளையம்- புன்னம்சத்திரம் செல்லும் வழியில் உள்ள ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகின்றன. இதனால் டி.என்.பி.எல். காகித ஆலை மற்றும் டி.என்.பி.எல். சிமெண்டு ஆலைக்கு பல்வேறு வகையான மூலப்பொருட்களை ஏற்றிக் செல்லும் லாரிகள் மற்றும் சிமெண்டு ஆலையிலிருந்து சிமெண்டு மூட்டைகள், காகித ஆலையிலிருந்து தயாரிக்கப்படும் காகித ரோல்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் போது இந்த ரெயில்வே பாதையில் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.
எனவே இப்பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
ரெயில்வே சுரங்கப்பாதை
மசக்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ்:- வேலாயுதம்பாளையம்-புன்னம்சத்திரம், புன்னம்சத்திரம் -வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் பள்ளி, கல்லூரி பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. அடிக்கடி ரெயில்வே கேட்டை பூட்டி விடுவதால் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கக்கோரி ரெயில்வே நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்ைக விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து கொடுத்தால் வாகன ஓட்டிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.
சேறும், சகதியுமான பாதை
பாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ்:- இந்த ரெயில்வே கேட் வழியாக வாகனத்தில் அடிக்கடி சென்று வருகிறேன். இந்த வழியாக செல்லும் பயணிகள் ரெயில்கள், சரக்கு ரெயில்கள் வெகுதூரத்தில் வரும்போதே கேட்டை அடைத்து விடுவார்கள். அதேபோல் காகித ஆலைக்கு நிலக்கரி கொண்டு செல்லும் போதும் நீண்ட நேரம் கேட்டை பூட்டி விடுவார்கள். இதனால் நீண்ட நேரம் கேட் திறப்பதற்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. ரெயில்வே கேட் அருகே இருசக்கர வாகனங்கள் சென்று வருவதற்காக மண் பாதை அமைக்கப்பட்டது. ஆனால் தொடர் மழையின் காரணமாக அந்த பாதை சேறும் சகதியுமாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே ரெயில்வே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.
வாகன ஓட்டிகள் அவதி
நாணப்பரப்பு பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன்:- புகழூர் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைத்துக் கொடுத்தால் அனைத்து வாகனங்களும் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாக இருக்கும்.
மேம்பாலம் அமைக்க கோரிக்கை
டி.என்.பி.எல். சிமெண்டு ஆலைக்கு வேலைக்கு செல்லும் நிவாஸ் கார்த்திக்:- இந்த ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கின்றன. விபத்தில் யாரேனும் சிக்கினாலோ அல்லது அவசரத்திற்கோ இந்த சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி மேம்பாலம் அமைத்து தர ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
வாகன ஓட்டிகள் வேதனை
புகழூர் சாலை வழியாக கிராவல் மண், செங்கல், ஜல்லி மற்றும் பல்வேறு பொருட்களை ஏற்றி செல்லும் லாரி டிரைவர்கள் கூறுகையில், தினமும் இந்த வழியாக பல்வேறு சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்கிறோம். ஆனால் இந்த வழியாக ஏராளமான ரெயில்கள் செல்வதாலும், காகித ஆலைக்கு அடிக்கடி நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் வருவதாலும் நீண்ட நேரம் ரெயில்வே கேட்டை மூடி விடுகின்றனர். இதனால் நீண்ட நேரம் ரெயில்வே கேட் திறப்பதற்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சரக்குகளை குறிப்பிட்ட நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.