குன்னம் -புத்தூர் சாலையில் மணல் கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
குன்னம்- புத்தூர் சாலையில் மணல் கிடப்பதால் வாகனஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
குன்னம்- புத்தூர் சாலையில் மணல் கிடப்பதால் வாகனஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணல் குவாரி
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் அரசு மணல் குவாரி இருந்து வருகிறது. இந்த குவாரில் இருந்து நாள்தோறும் 100-க்கணக்கான லாரிகளில் மண் எடுத்து செல்லப்படுகிறது. மேலும் லாரிகளில் மணல் மூடாமல் எடுத்துச்செல்லப்படுவதால் குன்னம் முதல் புத்தூர் வரை உள்ள 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையில் மணல் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிறது.
சாலையில் சிதறிக்கிடக்கும் மணல் காற்று வீசும் போது வாகனத்தில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோரின் கண்களில் படுவதால் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், முதியவர்கள், மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
மணல் ஏற்றி செல்லும் லாரிகள் மணலில் தண்ணீர் தெளித்து மேற்பகுதியை மூடி எடுத்து சென்றால் இதுபோன்று பாதிப்புகள் இருக்காது அதுமட்டுமின்றி மணல் பரவி கிடக்கும் சாலையில் தண்ணீர் தெளித்து மணல் காற்றில் பறக்காத அளவிற்கு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குன்னம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர் நரசிம்மன் கூறியதாவது. குன்னம் கிராமத்தில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது இங்கிருந்து லாரிகள் மணல் ஏற்றி சென்று வருகிறது. மணல் ஏற்றி செல்லும் லாரியில் மேல் பகுதியில் மூடாமல் திறந்த நிலையில் வருவதால் அதிக அளவில் மணல்கள் சாலையில் சிதறிக் கிடைக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகும் நிலைஏற்பட்டு வருகிறது. எனவே இப்பகுதி மக்கள் நலன்கருதி காலை, மாலை நேரங்களில் சாலையில் தண்ணீர் தெளிக்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து இப்பகுதி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.