போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
தஞ்சை பெரிய கோவிலில் நேற்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
தஞ்சை பெரியகோவில்
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களின் வருகை தற்போது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது அய்யப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் என அதிக அளவில் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். மேலும் தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
இந்தநிலையில் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் கோவிலுக்கு முன்புறம்வாகனம் நிறுத்தும் இடத்தில் வாகனங்கள் நிரம்பி காணப்பட்டன. மேலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
குறிப்பாக தஞ்சை சோழன் சிலையில் இருந்து மேம்பாலம் இறங்கும் இடம் வரை சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும், கோவிலில்இருந்து தரிசனம் செய்து விட்டு வந்த பக்தர்களும் சாலையை கடக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் மதியம் கோவில் நடைசாத்தப்பட்ட பின்னர் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்துகாணப்பட்டது.