போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்
காட்பாடி-சித்தூர் பஸ் நிலையத்தில் சிக்னலுக்கு முன்பே பஸ்கள் நிறுத்தப்படுவதால் கடும் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
காட்பாடி
காட்பாடி-சித்தூர் பஸ் நிலையத்தில் சிக்னலுக்கு முன்பே பஸ்கள் நிறுத்தப்படுவதால் கடும் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
அதிக போக்குவரத்து உள்ள நெடுஞ்சாலை
காட்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள கடலூர்-சித்தூர் தேசிய நெடுஞ்சாலை அதிக போக்குவரத்து உள்ள நெடுஞ்சாலையாக உள்ளது.
இந்த நெடுஞ்சாலை தான் தமிழகத்தையும்-ஆந்திராவையும் இணைக்கிறது. அதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்கின்றன.
எப்போதும் இந்த சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக தான் வேலூரில் இருந்து சித்தூருக்கும், திருப்பதிக்கும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன.
மேலும் காட்பாடி-பாகாயம் டவுன் பஸ்களும் இந்த சாலை வழியாக தான் செல்கின்றன. டவுன் பஸ்கள் மட்டுமல்லாது கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் குறிப்பாக பள்ளத்தூர், பரதராமி, தொண்டான்துளசி, வள்ளிமலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் இந்த சாலை வழியாகத்தான் செல்கின்றன.
அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
காட்பாடி பகுதியில் தினந்தோறும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக விருதம்பட்டு, சில்க்மில் பஸ் நிறுத்தம், சித்தூர் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
காலையிலும், மாலையிலும் பள்ளி, கல்லூரி நேரங்களிலும் வாகனங்கள் அதிகமாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுதவிர மற்ற நேரங்களில் கனரக வாகனங்கள் சென்றால் அந்த நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஓடை பிள்ளையார் கோவில் அருகே போக்குவரத்தை சரி செய்யும் போலீஸ் பூத் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
எந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் இந்த பூத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு போக்குவரத்து போலீசார் சென்று நெரிசலை சரி செய்வார்கள். ஆனால் பெரும்பாலும் இந்த போலீஸ் பூத் மூடியே கிடக்கிறது.
பஸ்களால் வாகன ஓட்டிகள் அவதி
சித்தூர் பஸ் நிலையத்தில் சித்தூர் மற்றும் கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் சிக்னலுக்கு முன்பே நிறுத்துவதால் அதற்கு பின்பு வரும் வாகனங்கள் அப்படியே நிற்கின்றன.
இதனால் வி.ஐ.டி. வழியாக செல்லும் வாகனங்களும், காட்பாடிக்கு செல்லும் வாகனங்களும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர்.
பயணிகளை ஏற்றும் பஸ்கள் சிக்னலை தாண்டி இன்னும் சற்று முன்புறம் சென்று நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.
அவ்வாறு செய்தால் போக்குவரத்து ஓரளவுக்கு கட்டுக்குள் வரும். சித்தூர் பஸ் நிலையத்தின் இடது புறத்திலும் போக்குவரத்து போலீசார் ஒருவர் நின்று போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.