தள்ளுவண்டி கடை நடத்தும் அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து


தள்ளுவண்டி கடை நடத்தும் அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து
x

தள்ளுவண்டி கடை நடத்தும் அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் தள்ளுவண்டி கடையில் புரோட்டோ கேட்டு உடனே கொடுக்காத கோபத்தில் அண்ணன்-தம்பியை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து

திருப்பூர் குமார்நகர் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் சுல்தான் (வயது 32). இவரது அண்ணன் இதயத்துல்லா (36). இவர்கள் 2 பேரும் சேர்ந்து பி.என்.ரோடு மில்லர் பஸ் நிறுத்தம் அருகே தள்ளுவண்டியில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9½ மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் சுல்தான், கடைக்கு வந்து சாப்பிடுவதற்கு புரோட்டோ கேட்டுள்ளனர்.

கூட்டம் அதிகமாக இருப்பதால் கொஞ்ச நேரம் காத்திருங்கள் என்று சுல்தான் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்தவர்கள் தாங்கள் கொண்டு வந்த சிறிய கத்தியால் சுல்தானின் கழுத்தை அறுத்தும், தடுக்க வந்த இதயத்துல்லாவின் இடுப்பில் குத்தியும், கல்லால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பினர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2 பேர் கைது

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், முதலிபாளையத்தை சேர்ந்த இம்ரான் (33) கடந்த 6 மாதத்துக்கு முன் காரில் சுல்தானின், உணவு கடைக்கு அருகே வந்தபோது, மற்றொரு காரில் இடித்துள்ளார். அப்போது அந்த கார் உரிமையாளருடன் சுல்தான் சேர்ந்து கொண்டு இம்ரானிடம் இருந்து பணம் வாங்கிக்கொடுத்துள்ளார். இதில் இம்ரானுக்கும், சுல்தானுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு இம்ரான், தனது நண்பர் அஸ்கர் அலி (35) உள்ளிட்டவர்களுடன் வந்து புரோட்டோ கேட்டு தகராறில் ஈடுபட்டு பின்னர் 2 பேரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இம்ரான், அஸ்கர் அலி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

-


Next Story