பழைய பொருட்கள் சேகரிப்பு மையத்தை பார்வையிட்ட கனிமொழி எம்.பி.
தூத்துக்குடியில் பழைய பொருட்கள் சேகரிப்பு மையத்தை கனிமொழி எம்.பி. நேற்று பார்வையிட்டார்.
தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பகல் நேரத்தில் வெளியே வரவே மக்கள் அச்சப்படுகின்றனர். இருப்பினும் அன்றாட அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே வருவோர் சுட்டெரிக்கும் வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கனிமொழி எம்.பி. காரில் சென்றார். அப்போது கொளுத்தும் வெயிலில் சாலையில் நடந்து சென்ற பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு அவர் குடைகளை வழங்கினார்.
வெயிலில் செல்லும்போது தவறாமல் குடை எடுத்துச் செல்ல வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு கனிமொழி எம்.பி. அறிவுறுத்தினார்.
மேலும், கோடை வெயிலில் செல்லும் மக்களுக்கு உதவும் வகையில் கனிமொழி எம்.பி. சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தண்ணீர் பந்தல்களிலும் பெண்கள், முதியவர்களுக்கு இலவசமாக குடைகள் வழங்கப்பட்டன. தூத்துக்குடியில் உள்ள தண்ணீர் பந்தல்களில் கனிமொழி எம்.பி. சார்பில் முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம் பொதுமக்களுக்கு இலவச குடைகளை வழங்கினார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் தமிழக அரசால் "என் வாழ்க்கை - என் சுத்தமான நகரம்" என்ற தலைப்பின் கீழ் கடந்த 20-ந் தேதி முதல் வருகிற 5.6.23 வரை பொதுமக்கள் கூடும் இடங்களில் தேவையற்ற பொருட்கள் வாங்குவதை தவிர்த்தல், வாங்கிய பொருட்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல் குறித்த ஆர்.ஆர்.ஆர். மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த மையங்கள் மாநகராட்சி மைய அலுவலகம், மண்டல அலுவலகங்கள், நுண் உரம் செயலாக்க மையங்கள், ராஜாஜி பூங்கா, எம்.ஜி.ஆர். பூங்கா, ஸ்டேட் பேங்க் காலனி பூங்கா, எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டு பூங்கா, முத்துநகர் கடற்கரை பூங்கா, கால்டுவெல் காலனி பூங்கா, சிவன் கோவில் அருகில் உள்ள மாநகராட்சி மண்டபம் என 22 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி மைய அலுவலகத்தில் அமைந்துள்ள மையத்தை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார். அப்போது மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப்பகுதிகளை கண்டறிவதற்காக ஆதிச்சநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள திருக்கோளூர், கொங்கராயகுறிச்சி, கருங்குளம் உள்ளிட்ட 6 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று மத்திய தொல்லியல் துறையினர் அறிவித்தனர். அதன்படி கடந்த ஆண்டு இறுதியில் முதல் முறையாக வாழ்விடப்பகுதிகளை கண்டறிவதற்காக திருக்கோளூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இதற்காக அங்கு சேர சோழ பாண்டீஸ்வரர் கோவில் அருகே 3 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இதில் வரலாற்று காலம் முதல் இரும்பு காலம் வரையிலான மண்ணடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 20 செ.மீ. ஆழத்தில் ஐந்து வரிசை கொண்ட சுடப்படாத மண் செங்கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செங்கல்கள் 26 செ.மீ. நீளம், 18 செ.மீ. அகலம், 8 செ.மீ. உயரத்தில் காணப்பட்டது. மற்றொரு அகழாய்வு குழியில் நான்கு தரைத்தளங்கள் உள்ளன. முதல் மற்றும் இரண்டாம் தரைத்தளங்களில் சுடுமண் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்பரப்பு முதல் 2 மீட்டர் ஆழம் வரை பல வண்ணங்கள் கொண்ட பாசிகள் மற்றும் உடைந்த வளையல்கள் கிடைக்கப்பெற்றது. பச்சை, சிவப்பு, கருப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்களிலும், வட்டம், உருளை, தட்டு ஆகிய வடிவங்களிலும் பாசிகள் உள்ளன. அதுமட்டுமின்றி இரும்பு பொருட்கள், செம்பு காசுகள் மற்றும் சுடுமண் உருவங்களும் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொருட்கள் குறித்து மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், கள ஆய்வாளர் எத்திஸ்ராஜ் ஆகியோர் விளக்கம் அளித்தனர். பின்னர், சேர சோழ பாண்டீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.