தரங்கம்பாடியில் நடந்த விழாவில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு
தரங்கம்பாடியில் ரூ.120 கோடியில் புதிய மீன்பிடி துறைமுக திறப்பு விழா நடந்தது. இதில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்,
பொறையாறு:
தரங்கம்பாடியில் ரூ.120 கோடியில் புதிய மீன்பிடி துறைமுக திறப்பு விழா நடந்தது. இதில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்,
மீன்பிடி துறைமுகம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சுமார் 15 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பெரிய மீனவ கிராமம் ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பான்மையானோர் மீன்பிடி தொழிலை தங்களுடைய முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். தற்போது இந்த கிராமத்தில் 350 சிறிய மீன்பிடி பைபர் படகுகளும்,150 விசைப்படகுகளும் உள்ளன.
இங்குள்ள மீனவர்கள் தங்களுடைய மீன்பிடி படகுகளை நிறுத்துவதற்கு துறைமுக வசதியின்றி அவதிப்பட்டனர். சுனாமி, கஜா புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டனர். இதனை போக்கும் வகையில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.120 கோடி மதிப்பீட்டில் 10.6 ஹெக்டர் பரப்பளவில் மீன்பிடி துறைமுகம் அமைக்க திட்டமிட்டு கடந்த 2019-ம் ஆண்டு மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
காணொலி காட்சி மூலம்
இந்த புதிய மீன்பிடி துறைமுகம் கடல் மட்டத்தின் மேல் தூண்டில் வளைவு, மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், நிர்வாக கட்டிடம், சாய்வு தளம், குடிநீர் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 800 சிறிய மீன்பிடி பைபர் படகுகளும், 225 விசைப்படகுகளும் நிறுத்துவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது பணி நிறைவு பெற்றதையொட்டி தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தின் மூலம் தரங்கம்பாடி, சின்னமேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை, குட்டியாண்டியூர், சந்திரபாடி, பெருமாள் பேட்டை, வெள்ளகோவில், புதுப்பேட்டை, சின்னூர்பேட்டை ஆகிய கிராம மீனவர்கள் பயனடையும் வகையில். நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தரங்கம்பாடி மீன்பிடி துறை முகத்தை திறந்து வைத்தார்.
விழா
அப்போது தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மயிலாடுதுறை ராமலிங்கம், எம். பி,எம்.எல்.ஏக்கள் பூம்புகார் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம், மீன் வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி, ஆகியோர் குத்துவிளக்கேற்றி துறைமுகத்தை மீனவர்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர்.
விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி, செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், குத்தாலம் ஒன்றியக் குழு தலைவர் மகேந்திரன், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ்குமார், செயற்பொறியாளர் சரவணகுமார், உதவி பொறியாளர் அன்னபூரணி உள்ளிட்ட அதிகாரிகளும், மயிலாடுதுறை மாவட்ட தலைமை கிராம மீனவ பஞ்சாயத்தார்கள், மீனவ கிராம பொதுமக்கள், தி.மு.க.வினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.