திரு அருட்பா இசை விழா நிறைவு
வடலூரில் திரு அருட்பா இசை விழா நிறைவுபெற்றது.
வடலூர்,
வடலூரில் வாழ்ந்து சித்தி பெற்ற அருட்பிரகாச வள்ளலாரின் கொள்கைகளை இசை மூலம் உலகம் எங்கும் பரவச்செய்யும் வகையில் ஆண்டுதோறும் வடலூர் ஞானசபை திடலில் திரு அருட்பா இசை விழா 3 நாட்கள் நடைபெறும். அதன்படி 37-ம் ஆண்டு திருஅருட்பா இசை விழா கடந்த 25-ந்தேதி காலை மங்கள இசையுடன் தொடங்கியது. விழாவில் கருங்குழி கிஷோர்குமார், ஆசிரியர் கனகசபை குழுவினர்களின் வில்லுப்பாட்டு நடைபெற்றது.
அதன்பிறகு திருத்தணி சாமிநாதன், பழனி சண்முகசுந்தர தேசிகர், கரூர் குமாரசுவாமி நாத தேசிகர் ஆகியோர் பாடினார்கள். ஊரன் அடிகளார், தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள் ஆகியோர் உரையாற்றினர். பின்னர் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரமும், திரு அருட்பா புகழ் மழையூர் சதாசிவம் உட்பட பலர் பாடினார்கள். மாலையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் டாக்டர் ஜெயராஜமூர்த்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். 2-ம் நாள் விழாவில் கருவேப்பம்படி ராஜாராமன், கீதாம்மாள், செல்வி பரமேஸ்வரி குழுவினர்களின் இசைநிகழ்ச்சி நடந்தது. முனைவர் காஷ்யப் மகேஷ், முனைவர் திருஞான பாலசந்தர் ஓதுவார் மற்றும் சென்னை திரை இசை பாடகர் பிரபாகரன், புதுவை அன்னபூரணி அம்மாள் உட்பட பலர் பாடினார்கள். 3-ம் நாளான நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெற்றது.
இசைவிழாவில் சக்கரபாணி, வடலூர் வேல்முருகன், ஈரோடு ரத்தினாம்பாள் குழுவினர், புதுவை அருணகிரிநாதர் இசைகுழுவினர்கள் நிகழ்ச்சியும், சக்திதாசன், சதாசிவம், ராமலிங்கம் குழுவினர்களின் வில்லுபாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து திருபுவனம் ஆத்மநாபன், புதுவை சம்பந்தம் ஓதுவார், பழனி ஞானசக்திவேல், ஜீவசீனிவாசன் மற்றும் ராகுல் குழுவினர் உள்பட ஏராளமான பாடகர்கள், இசைக்கலைஞர்கள் பாடினார்கள். இத்துடன் 3 நாள் இசை விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை திரு அருட்பா இசை சங்க தலைவர் ராதா சீனிவாசன், செயலாளர் வாசவி ஜோதி, பொருளாளர் ராமானுஜம், அருட்பா கிஷோர்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனா்.