திரு.வி.க. அரசு கல்லூரியில் 19 மின்விசிறிகள் திருட்டு
திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் 19 மின்விசிறிகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் 19 மின்விசிறிகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரசு கல்லூரி
திருவாரூரை அடுத்த கிடாரங்கொண்டான் பகுதியில் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் திருவாரூர் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
19 மின்விசிறிகள் திருட்டு
இந்த கட்டிடத்தில் ஆங்கிலம், தாவரவியல், ஆய்வகம் அலுவலகம் என சுமார் 30-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் மாணவர்களின் வசதிக்காக 4 முதல் 5 மின்விசிறிகள் அமைக்கப்பட்டிருந்தன. தினமும் வகுப்புகள் முடிந்ததும், இந்த கட்டிடத்தை கல்லூரி ஊழியர்கள் பூட்டிவிட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் வகுப்புகள் முடிந்த பிறகு கட்டிடத்தின் வெளிப்புறக்கதவை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.பின்னர் நேற்று காலை மாணவர்கள் வந்த போது கட்டிடத்தின் கதவு திறக்கப்பட்டு இருந்தது. பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது ஒவ்வொறு அறையிலும் இருந்த தலா 1 முதல் 2 மின்விசிறிகள் வீதம் 19 மின் விசிறிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுதொடர்பாக கல்லூரி சார்பில் திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் ெசய்யப்பட்டது.. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்விசிறிகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
கல்லூரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கழிவறையில் உள்ள கண்ணாடியை மர்மநபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.