பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.ஆர்.பி. செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.ஆர்.பி. செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.ஆர்.பி. செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பிரேமலதா வரவேற்றார். மாநில இணை செயலாளர் சுஜாதா தொடக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் தாமரை செல்வி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோரிக்கை
ஆர்ப்பாட்டத்தில், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கருவூலம் மூலம் ஊதியம் பெறும் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கிட வேண்டும். மாதத்தின் முதல் நாளில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும். நோய்த்தடுப்பு சிகிச்சை ஊக்கத்தொகை நிலுவை தொகையை உடனடியாக கொடுக்க வேண்டும். மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை பிடித்தம் செய்ய பிறப்பித்துள்ள உத்தரவை உடனடியாக ரத்து செய்து அனைத்து செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை கொடுக்க வேண்டும். செவிலியர் பணி அல்லாத பிற ஊழியர்களின் பணிகளை தொகுப்பூதிய செவிலியர்கள் மீது திணிப்பதை கைவிட வேண்டும். ஆய்வு என்ற பெயரில் எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை தடுத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
முடிவில், மாவட்ட பொருளாளர் டெய்சி நன்றி கூறினார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சுகாதாரத்துறை துணை இயக்குனரிடம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மனு அளித்தனர்.