சேறும், சகதியுமான சாலை-குளம்போல் தேங்கும் மழைநீர்


சேறும், சகதியுமான சாலை-குளம்போல் தேங்கும் மழைநீர்
x

சேறும், சகதியுமான சாலை-குளம்போல் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

பெரம்பலூர்

பாடாலூர்:

சேறும், சகதியுமான சாலை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் முக்கிய தெருவாக மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சார்பில் வடிகால் வசதியுடன் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.

தற்போது இந்த சிமெண்டு சாலை இருப்பதற்கு எந்தவொரு அடையாளமும் இல்லாத நிலையில் காணப்படுகிறது. சிமெண்டு சாலையின் இருபுறமும் இருந்த வடிகால்களும் தூர்ந்து போய்விட்டன. இதனால் தற்போது வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.

கோரிக்கை

இந்த சாலை வழியாக வாகன ஓட்டிகளும் சிரமத்துடன் சென்று வருகிறார்கள். புதிதாக சிமெண்டு சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நோய் பரவும் அபாயம்

இது குறித்து அதே பகுதியை சேர்ந்த முத்துவேல் கூறியதாவது:- எங்கள் தெரு அருகேதான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதனால் இந்த சிமெண்டு சாலை வழியாக மாணவ-மாணவிகள் பள்ளிக்கு நடந்து சென்று வருகிறார்கள். மாரியம்மன் கோவில் உள்ளிட்டவற்றுக்கு சென்று வர இந்த சாலையைத்தான் பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது சிமெண்டு சாலை சேதமடைந்து காணப்படுவதால் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. மழைநீர், கழிவுநீருடன் கலந்து தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த இந்த சாலையை அகற்றி விட்டு, புதிதாக சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும்.

குளம்போல் மழைநீர் தேங்குகிறது

சந்திரா முத்துசாமி கூறியதாவது:- மழைக்காலங்களில் இந்த சாலையில் நடமாட முடியவில்லை. வடிகாலும் தூர்ந்து போய்விட்டதால் கழிவுநீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளின் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. எனவே மழைக்காலத்தை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வசதியுடன் புதிதாக சிமெண்டு சாலை அமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் மாரியம்மன் கோவில் முன்பு மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால், பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அங்கு மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story