1 கி.மீட்டர் தூரத்துக்கு சூழல் மண்டலம் உருவாக்க உத்தரவுக்கு முதுமலை மக்கள் எதிர்ப்பு


1 கி.மீட்டர் தூரத்துக்கு சூழல் மண்டலம் உருவாக்க உத்தரவுக்கு முதுமலை மக்கள் எதிர்ப்பு
x

பாதுகாக்கப்பட்ட வனத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சூழல் மண்டலம் உருவாக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதற்கு முதுமலை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் போராட்டம் நடத்த ஆலோசித்து வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர், ஜூன்.9-

பாதுகாக்கப்பட்ட வனத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சூழல் மண்டலம் உருவாக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதற்கு முதுமலை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் போராட்டம் நடத்த ஆலோசித்து வருகின்றனர்.

மக்களுக்கு பாதிப்பு

நாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலத்தை கொண்டிருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு சுப்ரீம கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதில் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்கள் 1 கி.மீ. அளவுக்கு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இம்மண்டலங்களில் நிரந்தர கட்டுமானங்கள் இருக்க கூடாது. மேலும் சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சூழல் மண்டலங்களில் உள்ள கட்டுமானங்கள் குறித்த பட்டியலை தயாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஒவ்வொரு மாநில தலைமை வனப்பாதுகாவலர்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மலை பிரதேசம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனம் கொண்ட பகுதியாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால் பாதுகாக்கப்பட்ட வனத்தில் கரையோரம் வாழும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

போராட்டம் நடத்த ஆலோசனை

மேலும் முதுமலை புலிகள் காப்பக கரையோரம் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை ஊராட்சிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என அனைத்து தரப்பினரும் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட கூட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து போராட்டங்களை நடத்தவும் ஆலோசித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பல ஆண்டுகளாக வசிக்கும் நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அச்சமாக உள்ளது. எனவே அரசு தலையிட்டு எங்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story