யானைகளை பராமரிப்பது குறித்து பயிற்சி பெற தாய்லாந்து நாட்டுக்கு சென்ற முதுமலை பணியாளர்கள் -வன அதிகாரிகள், வழியனுப்பி வைத்தனர்
முதுமலை யானை பணியாளர்களுக்கு தாய்லாந்து நாட்டில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனால் வன அதிகாரிகள் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
கூடலூர்
முதுமலை யானை பணியாளர்களுக்கு தாய்லாந்து நாட்டில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனால் வன அதிகாரிகள் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
வளர்ப்பு யானை பணியாளர்கள்
முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் தாயைப் பிரிந்து தவித்தல், ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டு யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு வந்து கும்கி யானையாக மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக கால்நடை மருத்துவர், ஆய்வாளர் கொண்ட மருத்துவ குழுவினர் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து பாகன்கள், உதவியாளர்கள் வளர்ப்பு யானைகளை பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் யானைகளை பராமரிப்பது குறித்து தாய்லாந்து நாட்டில் சிறப்பு பயிற்சி ஒரு வார காலம் நடைபெற உள்ளது. தமிழகத்தை சேர்ந்த யானைப் பணியாளர்கள் 14 பேர் தாய்லாந்து நாட்டுக்கு பயிற்சிக்காக செல்ல உள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் பயிற்சி
இதில் கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து யானை பணியாளர்கள் 6 பேரும், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கால்நடை ஆய்வாளர் ரமேஷ், பாகன்கள் சுரேஷ், டி.எம். பொம்மன், சி.எம். பொம்மன், உதவியாளர்கள் குள்ளன், கேத்தன், சிவன், காளன் ஆகிய 8 பேர் என மொத்தம் 14 பேர் தாய்லாந்து நாட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர்.
இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் நேற்று மாலை 3 மணிக்கு தேர்வு செய்யப்பட்ட யானை பணியாளர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், துணை இயக்குனர்கள் வித்யா, அருண்குமார், வனச்சரகர்கள் மனோகரன் விஜயன் உள்ளிட்ட வன அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.