20-ந் தேதி முகூர்த்தம்-திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒரே நாளில் 100 திருமணம்


20-ந் தேதி முகூர்த்தம்-திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒரே நாளில் 100 திருமணம்
x

திருப்பரங்குன்றம் கோவிலில் வருகின்ற 20-ந் தேதி ஒரே நாளில் 100 திருமணங்கள் நடக்கிறது.

மதுரை

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றம் கோவிலில் வருகின்ற 20-ந் தேதி ஒரே நாளில் 100 திருமணங்கள் நடக்கிறது.

திருப்பரங்குன்றம் கோவில்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு, "திருமணத்தலம் "என்ற தனிப்பெருமை உண்டு. முகூர்த்த காலங்களில் சராசரி 50 முதல் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். சில சமயங்களில் திருமண ஜோடிகளும் திருமணத்துக்கு வரக்கூடிய உறவினர்களும் கோவிலுக்குள் குவிவார்கள். அதனால் முகூர்த்த காலங்கள் திருவிழாவாக உருமாறி காணப்படும். கடந்த மாதம் ஆடி என்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறவில்லை. இந்த நிலையில் ஆவணி மாதத்தின் வளர்பிறையின் முதல் முகூர்த்தமாக வருகின்ற 20-ந்தேதி வருகிறது.

இந்த நாளில் கோவிலுக்குள் திருமணம் செய்வதற்காக நேற்று இரவு 7 மணிவரை 80 ஜோடிகள் பதிவு செய்துள்ளனர். மேலும் திருமணத்திற்கு இன்னும் தொடர்ந்து பதிவு நடந்துகொண்டிருக்கிறது. குறைந்தபட்சமாக கோவிலுக்குள் பதிவு திருமணம் ஒரே நாளில் சதம் அடிக்ககூடும் என்று கோவில் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றனர்.

மண்டபங்கள், தங்கும் விடுதிகள்

கடந்த 3 மாதங்களுக்கு முன்பே திருப்பரங்குன்றத்தில் உள்ள 85 திருமண மண்டபங்களும் பதிவாகி உள்ளன. மண்டபங்களில் திருமணங்கள் நடந்த போதிலும் திருமண ஜோடிகள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்யக்கூடும். இதனால் அன்று கோவிலுக்குள் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும் என்று தெரிகிறது. மேலும் 21-ந் தேதியும் முகூர்த்த நாளாக இருப்பதால் கோவிலில் 55 திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வருகின்ற 20, 21-ந்தேதி ஆகிய 2 நாட்கள் 175-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவதால் திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

இதற்கிடையே 20-ந்தேதி திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் ரிங் ரோட்டில் கருப்பசுவாமி கோவில் எதிர்புறம் அ.தி.மு.க. மாநாடு நடப்பதால் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முதல் நாளில் வந்து தங்கி செல்வதற்கு மண்டபங்கள் மற்றும் தங்கு விடுதிகளை நாடி வருகின்றனர். ஆனால் திருமணத்திற்காக முன்பதிவு செய்யப்பட்டு விட்டதால் மண்டபங்கள், தங்கும் விடுதிகள் கிடைக்காமல் அலைமோதுகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

திருப்பரங்குன்றத்தின் வெளிப்புறத்தில் உள்ள ஒருசில தங்கும் விடுதிக்கு 3 மடங்கு கட்டணம் கேட்கும் நிலையும் உள்ளது. பொதுவாக திருமண முகூர்த்த நாட்களில் திருப்பரங்குன்றம் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் இருக்கும். 20-ந்தேதி 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவதாலும், அ.திமு.க. மாநாடு, மதுரை பழங்காநத்தத்தில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம் போராட்டம் என்று நடை பெறுவதால் வாகனங்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இதில் திருமண ஜோடிகள், திருமணத்திற்கு வரக்கூடியவர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் வாகன இடிபாடுக்குள் சிக்கி தவிக்க நேரிடும்.

எனவே, மதுரை மாநகர் போலீஸ் உயர் அதிகாரிகள் முன்கூட்டியே வாகன நெரிசலை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story