வீடுகளில் மூலிகைத்தோட்டம் அமைக்க மாடித்தோட்ட உபகரணங்கள்
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் வீடுகளில் மூலிகைத்தோட்டம் அமைக்கும் வகையிலான மூலிகை நாற்றுகள் மற்றும் உபகரணங்கள் தோட்டக்கலைத்துறை மூலம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
மூலிகைத்தோட்டம்
இதுகுறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:-
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் தற்போது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காய்கறி விதைகள் அடங்கிய விதை தொகுப்புகள், 5 வகையான பழ செடிகள் அடங்கிய பழத் தொகுப்புகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து வீடுகளில் மூலிகைத் தோட்டம் அமைக்க 10 வகையான மூலிகை செடிகள் அடங்கிய மாடித்தோட்ட கிட் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் 2022-2023 ன் கீழ் வீடுகளில் மூலிகைத்தோட்டம் அமைக்க தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை மூலம் ரூ.750 என்ற மானிய விலையில் வழங்கப்படுகிறது. தூய்மையான காற்றை சுவாசிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நாட்டு மருத்துவத்தை ஊக்குவிக்கவும் வீடுகளில் மூலிகை தோட்டம் அமைத்தல் அவசியமாகும். மூலிகை தோட்டம் அமைப்பது உள்ளூர் மருத்துவ தாவரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அழிந்து வரும் மருத்துவ தாவரங்களை பாதுகாக்கவும் உதவுகிறது.
மாடித்தோட்டம்
துளசி, கற்பூரவள்ளி, திருநீற்றுப்பச்சிலை, பிரண்டை, கற்றாழை, ஆடாதொடை, வல்லாரை, திப்பிலி, பிரண்டை, கீழாநெல்லி போன்ற மருத்துவ தாவரங்கள் பல பொதுவான நோய்களை குணப்படுத்தவும் சித்த வைத்தியத்திலும் பயன்படுகின்றன. மூலிகை தோட்ட தளையில் 10 வகையான மூலிகை செடிகள் வகைக்கு 2 செடிகள் வீதம், 10 செடி வளர்ப்பு பைகள், 2 கிலோ அளவுள்ள 10 தென்னை நார் கட்டிகள், 4 கிலோ மண்புழு உரம் மற்றும் தொழில்நுட்ப கையேடு ஆகியவை அடங்கியுள்ளது. இந்த மூலிகைத் தோட்டம் அமைக்க வீட்டின் புறப்பகுதிகள் அல்லது மாடியில் நன்கு சூரிய ஒளி கிடைக்கும் இடங்களை தேர்வு செய்ய வேண்டும். வீட்டின் மாடியில் மூலிகை தோட்டம் அமைக்கும் பட்சத்தில், செடி வளர்ப்பு பைகள் வைக்கும் இடத்தில் நீர்க்கசிவை தடுக்க 4×4 சதுர மீட்டரில் விரிப்புகளை விரிக்க வேண்டும். செடி வளர்ப்பு பை மற்றும் தென்னை நார் கட்டியில் 8 முதல் 10 லிட்டர் தண்ணீரை சேர்க்க வேண்டும். 5 முதல் 10 நிமிடம் வரை கழிந்ததும் தென்னை நார் கழிவு கொள்ளளவு அதிகரிக்கும். அதிகப்படியான நீர் வெளியேற பையின் பக்கவாட்டில் துளைகள் இல்லாவிடில் 4 துளைகளை இடவேண்டும். பை ஒன்றுக்கு 400 கிராம் மண்புழு உரம் கலக்க வேண்டும். தென்னை நார் கழிவுடன் கலந்த உரத்தை செடிகள் வளர்ப்பதற்கான பைகளில் நிரப்பும்போது பையின் உயரத்தில் ஒரு அங்குலத்திற்கு கீழே இருக்குமாறு நிரப்ப வேண்டும். தென்னை நார் கழிவுகள் நன்கு மக்குவதற்கு நிரம்பிய பைகளை 7 முதல் 8 நாட்கள் அப்படியே வைக்க வேண்டும். ஒரு பையில் ஒரே வகையான 2 மூலிகை செடிகள் நட வேண்டும். பிறகு பூ வாளி கொண்டு நீர் ஊற்ற வேண்டும்.
மானிய விலை
தென்னை நார் கழிவு ஊடகம், செடிகள், பருவநிலை, பைகளின் அளவு, செடியின் வளர்ச்சி ஆகியவற்றை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு நீர் பாய்ச்ச வேண்டும். தென்னை நார் கழிவை பயன்படுத்துவதால் அது இயற்கையாகவே தண்ணீரை தக்க வைக்கும் தன்மை இருப்பதால் பொதுவாக ஒரு முறையும், கோடை காலத்தில் 2 முறையும் செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டும். அதிகப்படியான நீரை ஊற்றினால் சத்துக்களை வெளியேற்றி பூஞ்சானங்களின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.செடிகளுக்கு தண்ணீர் தேவைப்படுகிறதா என்பதை ஒரு குச்சியை எடுத்து ஊடகத்தினுள் செருகும் போது குச்சியில் ஊடகத்தில் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற அவசியம் இல்லை. களைகள் தென்படும் போதெல்லாம் கையினாலேயே அவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.களை செடிகள் நீர், நுண்ணூட்ட சத்துக்கள் மற்றும் இடங்களுக்கு போட்டியிட்டு செடியின் வளர்ச்சியை பாதிக்கும் இவ்வாறு வளர்க்கப்படும் மூலிகைச் செடியின் பாகங்களை வீட்டு மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம். மூலிகை தோட்டத் தளைகளை மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நாளை(புதன்கிழமை) முதல் 17-ந்தேதி வரை நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறை மூலம் 50 சதவீத மானியத்தில் ரூ.750 என்ற மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. தேவைப்படுவோர் ஆதார் நகல் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். ஒரு ஆதார் நகலுக்கு 1 கிட் மட்டுமே வழங்கப்படும். மடத்துக்குளம் வட்டாரத்திற்கு மொத்தம் 18 எண்கள் மூலிகை தோட்டத்தழைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.