பென்னிகுயிக் பயன்படுத்திய பொருட்களை பாதுகாக்க முல்லைப்பெரியாறு அருங்காட்சியகம் அமையுமா?
பென்னிகுயிக் பயன்படுத்திய பொருட்களை பாதுகாக்க முல்லைப்பெரியாறு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
19-ம் நூற்றாண்டில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். அப்போதைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் 1810 முதல் 1811-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் தொற்றுநோய் பாதிப்புக்கு 56 ஆயிரத்து 135 பேர் பலியானார்கள். விவசாயமும் அடியோடு பாதிக்கப்பட்டது.
முல்லைப்பெரியாறு
அப்போதைய ஆங்கிலேய அரசு, பஞ்சத்தை போக்கவும், விவசாய பொருட்கள் உற்பத்தியை பெருக்கவும் மேற்கு தொடர்ச்சி மலையில் முல்லைப்பெரியாற்றில் அணை கட்ட திட்டமிட்டது.
தமிழக-கேரள மாநில எல்லையில் 1796-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ராமநாதபுரம் சேதுபதி முயற்சித்து பார்த்து கைவிட்ட முல்லைப்பெரியாறு அணை திட்டத்தை ஆங்கிலேய அரசு மீண்டும் கையில் எடுத்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, 999 ஆண்டு குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்பிறகு 1887-ம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது.
பென்னிகுயிக்
இந்த அணை கட்டும் திட்டத்துக்கு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கை ஆங்கிலேய அரசு நியமித்தது. பென்னிகுயிக்கின் விடா முயற்சி, தன்னம்பிக்கை, இயற்கையை எதிர்கொண்டு நடத்திய போராட்ட குணம் ஆகியவை இந்த அணை உருவாக முக்கிய காரணமாக அமைந்தது.
இயற்கை பேரிடரால் அணை கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் மேற்கொண்டு நிதி ஒதுக்க ஆங்கிலேய அரசு முன்வரவில்லை. ஆனால், பென்னிகுயிக் தனது முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை. அணை கட்டியே தீர வேண்டும் என்பதற்காக, பென்னிகுயிக் லண்டன் சென்றார். அங்கிருந்த தனது சொத்துகளை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு வந்து கம்பீரமான முல்லைப்பெரியாறு அணையை கட்டினார்.
அணை கட்டுமான பணிகள் முடிந்து 1895-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந்தேதி அணையில் இருந்து முதல் முறையாக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போதைய தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. அணை கட்டப்பட்ட பின்னரே இந்த பகுதிகளில் விவசாயம் செழிக்கத்தொடங்கின. இதனால் 5 மாவட்ட மக்களும் பென்னிகுயிக்கை கடவுள் போல் வணங்கி வருகின்றனர்.
நினைவு மணிமண்டபம்
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-ந்தேதி பென்னிகுயிக் பிறந்தநாளில், பொங்கல் வைத்து மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். 5 மாவட்ட மக்களால் கடவுளுக்கு நிகராக வணங்கப்படும் பென்னிகுயிக்கிற்கு பெருமை சேர்க்கும் வகையில், அவருக்கு வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பென்னிகுயிக்கின் வெண்கல சிலையுடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு இந்த மணிமண்டபத்தை அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா நேரில் வந்து திறந்து வைத்தார்.
2019-ம் ஆண்டில் பென்னிகுயிக் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அருங்காட்சியகம் அமையுமா?
பென்னிகுயிக் மணிமண்டபத்தை பார்வையிட தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இங்கு பென்னிகுயிக் பயன்படுத்திய நாற்காலி, அணை கட்டுமான பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அணையின் மாதிரி தோற்றம் போன்றவை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அணை கட்டுமான பணிக்காக லண்டனில் இருந்து பென்னிகுயிக் கொண்டு வந்த கலவை எந்திரம், அணைக்கு கட்டுமான பொருட்களை கொண்டு சென்ற இரும்பு படகு மற்றும் கட்டுமான பணிக்கு பயன்படுத்திய சில பொருட்கள் அணை பகுதியில் புதருக்குள் கிடக்கின்றன. அவற்றை பாதுகாக்க மணிமண்டப வளாகத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பாலார்பட்டி கர்னல் பென்னிகுயிக் எழுச்சி பேரவை தலைவர் ஆண்டியிடம் கேட்டபோது, "முல்லைப்பெரியாறு அருங்காட்சியகம் என்ற பெயரில் மணிமண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அணை கட்டுமான பணியின் போது பயன்படுத்திய இரும்பு படகு, கலவை எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் அணை பகுதியில் துருப்பிடித்து வீணாவதை சுத்தம் செய்து அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும். அணை கட்டுமான பணியின் போது 426 மக்கள் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களின் பெயர் விவரங்களை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த வேண்டும். மணிமண்டபத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், இங்கு கழிப்பறை கட்டப்பட்டும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. அதனை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பென்னிகுயிக் பிறந்தநாளின் போது பொங்கல் வைத்து வழிபாடு நடத்த ஏராளமான கிராம மக்கள் வருகின்றனர். ஆனால், பொங்கல் வைப்பதற்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்படவில்லை. எனவே, பாதுகாப்பான சூழலில் பொங்கல் வைக்க மேற்கூரை வசதியுடன் கூடிய இடவசதி ஏற்படுத்த வேண்டும்" என்றார்.