முல்லைப்பெரியாறு அணையில் தமிழக அரசு வக்கீல்கள் குழுவினர் ஆய்வு


முல்லைப்பெரியாறு அணையில் தமிழக அரசு வக்கீல்கள் குழுவினர் ஆய்வு
x

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வாதாடும் அரசு வக்கீல்கள் குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.

தேனி

தமிழக வக்கீல்கள் குழு ஆய்வு

தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையானது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக தேக்கிக் கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு 152 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, கடந்த 2014-ம் ஆண்டில் இந்த தீர்ப்பு அமல்படுத்தப்பட்டு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

இந்த அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து வழக்குகள் நடந்து வருகின்றன. இந்த வழக்குகளில் தமிழக அரசின் தரப்பில் அரசு வக்கீல்கள் குழுவினர் ஆஜராகி வாதாடி வருகின்றனர். இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் தமிழக அரசின் தரப்பில் வாதாடும் வக்கீல்கள் குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மூத்த வக்கீல்கள் உமாபதி, குமணன், காவிரி தொழில்நுட்ப குழும துணைத்தலைவர் செல்வராஜ் ஆகியோரை கொண்ட குழுவினர் தேக்கடியில் இருந்து படகு மூலம் அணைக்கு சென்றனர்.

வல்லக்கடவு பாதை

அங்கு பிரதான அணை, பேபி அணை, மதகு பகுதிகள் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் வல்லக்கடவு வழியாக அணைக்கு வரும் பாதையை பார்வையிட்டனர். அப்போது அணையின் கட்டுமான தொழில்நுட்பங்கள் குறித்தும், அணையின் பராமரிப்பு பணிகளில் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள், இடையூறுகள் குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டறிந்தனர். இந்த ஆய்வின் போது அணையின் சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவி பொறியாளர்கள் குமார், ராஜகோபால், பரதன் ஆகியோர் உடனிருந்தனர்.Next Story