முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்வு
நீர்வரத்து அதிகரிப்பால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்தது. கேரள மாநில மக்களுக்கு முதல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை
தமிழக -கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை நீரை தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இந்த அணையில் பருவகாலத்துக்கு ஏற்ப நீர் மட்ட உயர்வை நிர்ணயிக்கும் ரூல்கர்வ் விதிப்படி இன்று 10-ந்தேதி வரை அணையில் 139.50 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் என்றுஅட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.25 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2,276 கனஅடியாக இருந்தது. தமிழக பகுதிக்கு வினாடிக்கு 511 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
முதல் அபாய எச்சரிக்கை
அணையின் நீர்மட்டம் தற்போது 136 அடியை எட்டியதால் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார், வல்லக்கடவு, சப்பாத்து ஆகிய பகுதி மக்களுக்கு முதல் அபாய எச்சரிக்கை விடுக்கும்படி இடுக்கி மாவட்ட கலெக்டருக்கு, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.