முள்ளுவாடி ரெயில்வே கேட்உடைந்து விழுந்ததால் பரபரப்பு


முள்ளுவாடி ரெயில்வே கேட்உடைந்து விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Nov 2022 1:00 AM IST (Updated: 8 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் முள்ளுவாடி ரெயில்வே கேட் திடீரென உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

சேலத்தில் முள்ளுவாடி ரெயில்வே கேட் திடீரென உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முள்ளுவாடி ரெயில்வே கேட்

சேலம் மாநகரின் மையப்பகுதியில் முள்ளுவாடி ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே வழித்தடத்தில் சேலம் ஜங்ஷனில் இருந்து விருத்தாசலம் செல்லும் பயணிகள் ரெயில், சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களுரு-காரைக்கால் பயணிகள் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் செல்லும்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் பிரட்ஸ் ரோட்டில் இருபுறத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதோடு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 2018-ம் ஆண்டு முள்ளுவாடி கேட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் இதுவரை முடிவடையவில்லை. இதனால் பிரட்ஸ் ரோடு வழியாகத்தான் வாகனங்கள் இருபுறத்திலும் சென்று வருகின்றன.

உடைந்து விழுந்தது

இந்நிலையில், நேற்று காலை சேலம் ஜங்ஷனில் இருந்து விருத்தாசலத்திற்கு பயணிகள் ரெயில் வந்தது. அப்போது, அங்கு பணியில் இருந்த கேட் கீப்பர், ரெயில்வே கேட்டை மூடியபோது திடீரென பள்ளிவாசல் பகுதியில் இருந்த கேட் உடைந்து விழுந்தது. அந்த சமயத்தில் வாகன ஓட்டிகள் யாரும் வராததால் யாருக்கும் எந்த விபத்தும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார் சாலையின் இருபுறத்திலும் சங்கிலியை பிடித்துவாறு ரெயில் செல்லும் வரையிலும் பாதுகாப்பாக நின்றனர். ரெயில்வே கேட் உடைந்ததால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கேட் சரி செய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.


Next Story