கைகொடுக்கும் பல பயிர் சாகுபடி
கைகொடுக்கும் பல பயிர் சாகுபடி
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் கூடுதல் வருவாய்க்கு கைகொடுக்கும் பல அடுக்கு, பல பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாற்றுத்தொழில்
இன்றையநிலையில் கூலி ஆட்கள் பற்றாக்குறை, போதிய விலையின்மை, பருவநிலை மாற்றங்கள், பாசன நீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.இதனால் விவசாயத்தைக் கைவிட்டு மாற்றுத் தொழில் தேடி செல்லும் நிலைக்கு பல விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.அதேநேரத்தில் மாற்று வழிகள் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டும் முயற்சியில் சில விவசாயிகள் இறங்கியுள்ளனர்.அந்தவகையில் விவசாய விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது ஒரு முறையாக இருக்கிறது.அத்துடன் பல அடுக்குப் பயிர்கள் மற்றும் பல பயிர்கள் சாகுபடி செய்யும் முறை விவசாயிகளுக்கு கைகொடுப்பதாகவே உள்ளது.
ஊடுபயிர் சாகுபடி
உடுமலை பகுதியில் தென்னையில் ஊடுபயிராக வாழை மற்றும் வேலிப்பயிராக தேக்கு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது'கூலி ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் தென்னை சாகுபடிக்கு மாறினோம்.ஆனால் அதிலும் தேங்காய், இளநீர் மற்றும் உரிமட்டைகளுக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளது.இதனால் தேங்காயை மதிப்புக்கூட்டி கொப்பரை உற்பத்தி செய்வதில் பலர் ஆர்வம் காட்டினர்.ஆனால் கொப்பரை விலையும் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது.இந்தநிலையில் ஊடுபயிர் சாகுபடியே கைகொடுப்பதாக உள்ளது.தென்னையில் ஊடுபயிராக கோகோ, பாக்கு, மிளகு, வாழை, காய்கறிகள் உள்ளிட்ட பலவிதமான பயிர்களை சாகுபடி செய்ய முடியும்.இதன்மூலம் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.மேலும் உரம், பூச்சி மருந்து, பாசன நீர் என அனைத்திலும் செலவு குறைகிறது.அதேநேரத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.இதனால் பல விவசாயிகள் பல பயிர் சாகுபடி மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.அதிலும் பல அடுக்கு தாவரங்களை தேர்வு செய்யும்போது சிறந்த மகசூல் பெற முடிகிறது'என்று விவசாயிகள் கூறினர்.