பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி மோசடி: வெளிநாடு தப்பியவர்களை சர்வதேச போலீஸ் உதவியுடன் பிடிக்க நடவடிக்கை


பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி மோசடி: வெளிநாடு தப்பியவர்களை சர்வதேச போலீஸ் உதவியுடன் பிடிக்க நடவடிக்கை
x

பொதுமக்களை ஏமாற்றி பல்லாயிரம் கோடி ரூபாய் சுருட்டிய மோசடி நிறுவனங்களின் முக்கிய குற்றவாளிகள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று விட்டனர். அவர்களை சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்ய டி.ஜி.பி.சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

சென்னை,

அதிக வட்டி மற்றும் தங்க காசு போன்ற பரிசு பொருட்களை தருவதாக ஏமாற்றி பொதுமக்களிடம் முதலீட்டு தொகை பெற்று பல்லாயிரம் கோடி ரூபாயை சுருட்டிய மோசடி நிறுவனங்கள் தமிழகத்தில் தொடர்ந்து கோலோச்சி வருகின்றன.

அந்த நிறுவனங்கள் மீது புகார் கொடுக்க பொதுமக்கள் பெரும் போராட்டம் நடத்த வேண்டி உள்ளது. அவ்வாறு புகார் கொடுத்தாலும் உரிய வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்று தருவதில் போலீசாரும் பெரும் போராட்டம் நடத்துகிறார்கள்.

மோசடி பேர்வழிகள் கோடிகளை சுருட்டிக்கொண்டு எளிதில் தப்பி ஓடி விடுகிறார்கள்.

இது போன்ற மோசடி நிறுவன முதலாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களை கோர்ட்டில் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு, ஏமாந்த மக்களுக்கும், அவர்கள் கட்டிய முதலீட்டு தொகையை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்று டி.ஜி.பி.சைலேந்திரபாபு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி மோசடி முதலாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும், டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

ஆய்வு கூட்டம்

இந்த நிலையில் மோசடி நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் பொருளாதார குற்றப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை சைலேந்திரபாபு நேற்று தனது அலுவலகத்தில் நடத்தினார். அந்த கூட்டத்தில் ஐ.ஜி.ஆசியம்மாள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆருத்ரா கோல்டு நிறுவனம், எல்.என்.எஸ்., ஐ.எப்.எஸ்., ஹிஜாவு, எல்பின் போன்ற மோசடி நிறுவனங்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அப்போது டி.ஜி.பி. கேட்டறிந்தார்.

சர்வதேச போலீஸ் உதவியுடன்....

மேற்கண்ட நிறுவனங்களின் நிர்வாகிகள் சிலர் துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது.

அவர்களுக்கு சிகப்பு அட்டை நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றும், மேலும் அவர்களை சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. உத்தரவிட்டார்.


Next Story