பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணி-கூடுதல் இயக்குனர் நேரில் ஆய்வு
வேலூர் தொரப்பாடியில் ரூ.2 கோடியே 82 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு கால்நடை மருத்துவமனையை கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் நவநீதகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
வேலூர் தொரப்பாடியில் ரூ.2 கோடியே 82 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு கால்நடை மருத்துவமனையை கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் நவநீதகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
கூடுதல் இயக்குனர் ஆய்வு
தமிழகத்தில் உள்ள கால்நடைகளில் இருந்து கிடைக்கும் பால், முட்டை, இறைச்சி, ரோமம் ஆகியவற்றின் உற்பத்தியை அளவிடுவதற்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை மாதிரி கால்நடை கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.
அதன்படி காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் நடந்துவரும் மாதிரி கால்நடை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணியை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் (சிறப்பு திட்டங்கள்) நவநீதகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் அந்த பகுதியில் கணக்கெடுக்கப்பட்டுள்ள கால்நடைகளின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை கேட்டறிந்து பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் கணக்கெடுப்பு பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.
கால்நடை மருத்துவமனை
அதைத்தொடர்ந்து கூடுதல் இயக்குனர் நவநீதகிருஷ்ணன் வேலூர் தொரப்பாடியில் ரூ.2 கோடியே 82 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு கால்நடை மருத்துவமனை மற்றும் பள்ளிகொண்டா அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் ரூ.60 லட்சத்தில் புதிதாக கட்டப்படும் புதிய கால்நடை மருந்தக கட்டிடத்தையும் பார்வையிட்டார்.
கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி ஒப்பந்ததாரர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் அவர் கால்நடைகளுக்கான ஆம்புலன்சையும் பார்வையிட்டார்.
ஆய்வின்போது வேலூர் மண்டல கால்நடை துறை இணை இயக்குனர் (பொறுப்பு) உதயகுமார், துணை இயக்குனர் கோபிகிருஷ்ணா மற்றும் கால்நடை கணக்கெடுப்பாளர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.