குப்பைகளை மறுசுழற்சி மையங்களில் வழங்க நகராட்சி தலைவி வேண்டுகோள்
சங்கரன்கோவிலில் குப்பைகளை மறுசுழற்சி மையங்களில் வழங்க நகராட்சி தலைவி உமா மகேசுவரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேசுவரி சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சங்கரன்கோவில் நகராட்சியில் ேபாகி பண்டிகையை முன்னிட்டு தேவையற்ற குப்பைகள் மற்றும் பொருட்களை எரிக்க கூடாது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில், புகையில்லா போகி பண்டிகை கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து அகற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை தெருக்களில் கொட்டாமல் அவற்றை வாரச்சந்தை ரோடு, திருவேங்கடம் சாலை உரக்கிடங்கு மற்றும் பி.எஸ்.நகர் பகுதிகளில் உள்ள நகராட்சி எம்.சி.சி. பசுமை மறுசுழற்சி மையங்களில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒப்படைக்கலாம்.
மேலும் டயர், துணி மற்றும் பழைய குப்பைகளை எரிப்பது தடை செய்யப்பட்டுள்ளதால் எக்காரணம் கொண்டும் நகராட்சி பகுதியில் குப்பைகளை எரிக்க கூடாது. இந்த பணிகளை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹரிஹரன் தலைமையில், நகராட்சி சுகாதார அலுவலர் பாலசந்தர் முன்னிலையில் நகராட்சி ஆய்வாளர்கள் கருப்பசாமி, மாரிமுத்து, மாரிச்சாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்காணித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.