3 மாத சம்பளம் வழங்கக்கோரி நகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா


3 மாத சம்பளம் வழங்கக்கோரி நகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா
x

3 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து கூடலூரில் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

நீலகிரி

கூடலூர்

3 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து கூடலூரில் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

சாலையில் அமர்ந்து தர்ணா

கூடலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வழக்கம்போல் பணியாளர்கள் வேலைக்கு வந்தனர். அப்போது நகராட்சி சுகாதாரத்துறையினர் 40 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதைக்கேட்ட பணியாளர்கள், தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் 3 மாத நிலுவை சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன்பு சாலையோரத்தில் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தகவலறிந்த நகராட்சித் தலைவர் பரிமளா, தாசில்தார் சித்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், நகராட்சி துணைத் தலைவர் சிவராஜ், சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் விரைந்து வந்து தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒப்பந்த பணியாளர்களுக்கான டெண்டர் முடிவடைந்து விட்டது. எனவே புதியதாக டெண்டர் விடப்பட உள்ளது. அவ்வாறு டெண்டர் விட்டதும் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரையில் தூய்மைப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து 3 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்று பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். தூய்மைப் பணியாளர்களின் திடீர் போராட்டத்தால் நகராட்சி பகுதியில் குப்பைகள் சேகரிக்கும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் முக்கிய இடங்களில் சுகாதார பாதிப்பு ஏற்பட்டது.


Next Story