வளர்ச்சி பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு
திருவாரூரில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா ஆய்வு செய்தார்.
திருவாரூர்:
திருவாரூரில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா ஆய்வு செய்தார்.
ஆய்வு
திருவாரூர் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள், துப்பரவு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் பொன்னையா நேற்று ஆய்வு செய்தார். முன்னதாக குப்பை கிடங்கு, மக்கும் குப்பை உர மையம், பழைய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டிடம், புதிய பஸ் நிலையம், ஆடுவதை கூடம், நகராட்சி வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது கட்டிடம் உள்ளிட்ட கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேலும் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், மஞ்சபையை வழங்கினார். அப்போது பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில், துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், செந்தில், நகராட்சி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் இருந்தனர்.
ரூ.1000 கோடி ஒதுக்கீடு
பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவாரூரில் வீடுகள் தோறும் குப்பை தரம் பிரித்து வாங்குதல் மற்றும் நகராட்சியில் குப்பைகளை கையாளும் விதம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் உள்ள கழிவறைகள், சாலை வசதிகள், வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. அரசு பல்வேறு வகையில் நிதி ஒதுக்கீடு செய்து வருவதால் திருவாரூர் நகராட்சி சிறப்பான நிலையை அடையும். கடந்த ஓராண்டில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி துறைக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பஸ் நிலையங்கள்
மூலதன மானிய நிதியில் ரூ.442 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நூலகம் மற்றும் அறிவுசார் மேம்பாட்டு மையம் சந்தைகள் போன்றவற்றுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான நிதி 50 சதவீதம் நகராட்சிகளுக்கு வந்து விட்ட நிலையில் பணிகள் தொடங்கி நடைபெறுகிறது. நடப்பு ஆண்டில் 37 பஸ் நிலையங்கள் கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மன்னாா்குடி
மன்னார்குடி நகரபகுதியில் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் பொன்னையா நேற்று ஆய்வு செய்தார். மன்னார்குடி நகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மன்னார்குடி நகரில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள், நவீன பஸ் நிலையம் அமைப்பது, குப்பை கிடங்கில் கழிவுகளை பிரித்து மறு சுழற்சிக்கு அனுப்பும் திட்டம், பழைய காய்கறி சந்தையில் புதிய கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஜானகி ரவீந்திரன், மன்னார்குடி நகராட்சி தலைவர் மன்னை சோழராஜன், துணைத்தலைவர் கைலாசம், மற்றும் பலர் இருந்தனர்.