நகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் தர்ணா போராட்டம்
பேரணாம்பட்டில் நகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பேரணாம்பட்டு புத்துக்கோவில் சந்திப்பு சாலையில் இருந்து வரும் கால்வாய் நீர் 8-வது வார்டில் உள்ள உமர் வீதி, தாதா வீதி, எர்தாங்கல் ஹக்கீம் வீதி உள்ளிட்ட தெருக்களின் வழியாக சென்று பேரணாம்பட்டு நகரில் உள்ள ஏரியில் கலக்கிறது. இந்த கால்வாயையொட்டி சுமார் 500 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் அனைத்தும் பழைய கட்டிடங்கள் ஆகும். மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கால்வாயில் பெருக்கெடுத்து வரும் நீருடன் விஷ ஜந்துக்கள் மேற்கண்ட வீதிகளில் உள்ள வீடுகளுக்கு புகுந்து விடுகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து பேரணாம்பட்டு நகராட்சி 8-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் முஜம்மில் அஹம்மத் நகர மன்ற கூட்டத்திலும், நகராட்சி ஆணையாளரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்க வில்லையென்றும், கால்வாயை தூர் வாரி கரைகளை சீரமைக்ககோரி திடீரென தனது ஆதரவாளர்களுடன் திடீரென அந்தப்பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், நகராட்சி பொறியாளர் சண்முகவேல் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நகராட்சி பொறியாளர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டார்.