நகராட்சி ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை; உறவினர்கள் மறியல் போராட்டம்


தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் நகராட்சி ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிக்கான தொகையை வழங்காததே இதற்கு காரணம் என புகார் கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் நகராட்சி ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிக்கான தொகையை வழங்காததே இதற்கு காரணம் என புகார் கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நகராட்சி ஒப்பந்ததாரர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த நடுநாலுமூலைக்கிணறு அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சமுத்திரபாண்டியன் மகன் ரவிகுமார் (வயது 46). இவர் திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பிளம்பிங் வேலை செய்து வந்தார். இவருக்கு சந்திரகாந்தா என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

ரவிகுமார் நேற்று முன்தினம் மாலையில் அப்பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நகராட்சி அலுவலகம் முற்றுகை

இதற்கிடையே, திருச்செந்தூர் நகராட்சியில் ரவிகுமார் செய்த ஒப்பந்த பணிகளுக்கு கடந்த 8 மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் அந்த தொகையை வழங்காததால்தான் ரவிகுமார் தற்கொலை செய்ததாக புகார் கூறி, அவருடைய உறவினர்கள், கிராம மக்கள் நேற்று காலையில் திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அவர்களை திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்துக்கு வரவழைத்து, தாசில்தார் சுவாமிநாதன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால், அவர்கள் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியின் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இழப்பீடு வழங்க வேண்டும்

பின்னர் அவர்களை திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைத்து, உதவி கலெக்டர் புகாரி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், தாசில்தார் சுவாமிநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், நகராட்சி ஆணையாளர் வேலவன் மற்றும் நடுநாலுமூலைகிணறு ஊர் தலைவர் சிவசுப்பிரமணியன், துணைத்தலைவர் அருண்போஸ், மேல திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் மகாராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், ரவிகுமாருக்கு வழங்க வேண்டிய பாக்கித்தொகையை அவரது குடும்பத்தினரிடம் உடனே வழங்க வேண்டும். மேலும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ரவிகுமாருக்கு பாக்கித்தொகை வழங்காதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

சோகம்

இதையடுத்து ரவிகுமாருக்கு வழங்க வேண்டிய பாக்கித்தொகையை நாளைக்குள் (திங்கட்கிழமை) வழங்குவதாகவும், ரவிகுமாரின் மூத்த மகளுக்கு நகராட்சியில் தற்காலிக டெங்கு மஸ்தூர் மேற்பார்வையாளர் பணி வழங்குவதாகவும், குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள், மாலையில் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ரவிகுமாரின் உடலை பெற்று சென்று இறுதிச்சடங்கு நடத்தினர். பணிக்கான தொகையை வழங்காததால் நகராட்சி ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story