மாடுகளை பிடித்த நகராட்சி பணியாளர்கள்
பெரியகுளம் நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்தனர்.
பெரியகுளம் நகராட்சி பகுதியில் முக்கிய சாலை மற்றும் தெருக்களில் மாடுகள் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள், போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறு ஏற்படுகிறது. இது சம்பந்தமாக பலமுறை நகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்தனர்.
இதையடுத்து பிடிபட்ட 12 மாடுகளை நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்று மரத்தில் கட்டி வைத்தனர். இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் மற்றும் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமை கோராத மாடுகளை 2 நாட்களுக்கு பிறகு அறிவிப்பு செய்து பொது ஏலம் விடப்பட உள்ளதாக நகராட்சி ஆணையர் கணேஷ், சுகாதார ஆய்வாளர் அசன்முகமது ஆகியோர் தெரிவித்தனர்.