அடிப்படை வசதிகள் இன்றி செயல்படும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி
அடிப்படை வசதிகள் இன்றி சீர்காழி நகராட்சி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
அடிப்படை வசதிகள் இன்றி சீர்காழி நகராட்சி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடிப்படை வசதிகள்
சீர்காழி வடக்கு மட வளாகத்தில் சீர்காழி நகராட்சி மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவ-மாணவிகள் மாடிப்படியிலும், மரத்தடியிலும், பள்ளி வளாகத்திலும் அமர்ந்து படிக்க வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது.மேலும் இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம், ஆய்வுக்கூடங்கள், நூலகம், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சைக்கிள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
மாணவர்கள் அவதி
இந்த பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் செய்முறை தேர்வு, அரசு பொதுத்தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் எழுத வேறு பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் விளையாட்டு மைதானம் இல்லாததால் விளையாட்டு போட்டிகளில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு புதிதாக வகுப்பறை, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வக கட்டிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்களை கட்டித்தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.