ரூ.10 கோடி மாநகராட்சி நிலம் ஆக்கிரமிப்பு
ரூ.10 கோடி மாநகராட்சி நிலம் ஆக்கிரமிப்பு
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட ராயபுரம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் பூங்கா பயன்பாட்டுக்காக 34 சென்ட் அளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட், பங்கா உள்ளிட்ட பொதுப்பயன்பாட்டு இடங்கள், சொத்துக்கள் குறித்த விவரங்களை சேகரித்து அவற்றை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வரும் வகையில் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதுபோல் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் 34 சென்ட் அளவுள்ள பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் தனிநபர் 4 பேர் ஆக்கிரமிப்பு செய்து லைன் வீடு, அலுவலகம், சுற்றுச்சுவர் அமைத்துள்ளது தெரியவந்தது. மாநகராட்சி ஆணையாளர் உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. நோட்டீஸ் பெற்ற 3 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாதபட்சத்தில், மாநகராட்சி மூலமாக ஆக்கிரமிப்பை அகற்றி அதற்கான செலவுத்தொகை வசூலிப்பதோடு வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடியாகும்.
----------