புஞ்சைபுளியம்பட்டியில் சாக்கடை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; நகராட்சி கூட்டத்தில் தலைவர் உறுதி


புஞ்சைபுளியம்பட்டியில் சாக்கடை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; நகராட்சி கூட்டத்தில் தலைவர் உறுதி
x

புஞ்சைபுளியம்பட்டியில் சாக்கடை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தலைவர் உறுதி அளித்தார்.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டியில் சாக்கடை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தலைவர் உறுதி அளித்தார்.

நகராட்சி கூட்டம்

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி கூட்டம், கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் தி.ஜனார்த்தனன் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பி.ஏ.சிதம்பரம், ஆணையாளார் சக்திவேல், பொறியாளர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

பி.ஏ.சிதம்பரம் (துணைத் தலைவர்) : வாரச்சந்தை வளாகத்தில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கவும், வாரசந்தையில் கடைகள் கட்டவும் திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்.

ரோடு பழுது

பொறியாளர்: தனியார் கல்லூரி மாணவர்களை கொண்டு வாரச்சந்தை பகுதி ரோடு அளவீடு செய்யபட்டு உள்ளது. வாரச்சந்தையில் தற்போது 529 கடைகள் உள்ளன. 600 கடைகள் கட்டவும், பொழுதுபோக்கு பூங்கா கட்டவும் திட்ட மதிப்பீடு விரைவில் தயார் செய்யப்படும்.

வெங்கிடாசலம் (காங்கிரஸ்) : பவானிசாகர் ரோட்டில் பழைய மார்கெட் பகுதியில் உள்ள வேகத்தடை குறித்த அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்துகள் நடக்கிறது.

பி.ஏ.சிதம்பரம் (துணைத் தலைவர்) : மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிவா (தி.மு.க.) : எனது வார்டில் பாலசுப்பிரமணியம் தெருவில் அமைக்கப்பட்டு உள்ள பேவர் பிளாக் ரோடு தரமற்ற வகையில் அமைக்க பட்டதால் மிகவும் பழுது அடைந்து உள்ளது.

தெருவிளக்கு

ஆணையாளர்: விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பூர்ண ராமச்சந்திரன் (தி.மு.க.): 9-வது வார்டு சர்ச் வீதியில் 40 ஆண்டுக்கும் மேலாக சாக்கடை பிரச்சினை உள்ளது.

ஜனார்த்தனன் (தலைவர்):- சாக்கடை பிரச்சினை தீர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கிரிஜா (சுயேச்சை) : எனது வார்டு லட்சுமி நகரில் மின்கம்பத்தில் புதிய தெருவிளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொறியாளார்: விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்டவாறு விவாதங்கள் நடைபெற்றன.




Next Story