புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில் 3 உறுப்பினர்கள் திடீர் தர்ணா


புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில் 3 உறுப்பினர்கள் திடீர் தர்ணா
x

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில் 3 உறுப்பினர்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில் 3 உறுப்பினர்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

3 பேர் தர்ணா

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். நகராட்சி துணைத்தலைவர் பி.ஏ.சிதம்பரம், ஆணையாளர் செய்யது உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. உறுப்பினர் புவனேஸ்வரி எழுந்து பேசினார். அவர் கூறும்போது, 'எனது வார்டை சேராத நபர் என்னை அவமதிக்கும் வகையில் ஒரு மனுவை ஆணையாளரிடம் அளித்து உள்ளார். வார்டு சபா உறுப்பினர் நியமனம் செய்யும்போது என்னிடம் கலந்து ஆலோசனை செய்யவில்லை. இதுகுறித்து தலைவர் மற்றும் ஆணையாளரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே எனக்கு பதில் கூறிவிட்டு கூட்டம் நடத்துங்கள்' என கூறி கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கிரிஜா (சுயேச்சை), துரைசாமி (காங்கிரஸ்) ஆகிய 3 பேரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தீர்மானங்கள்

அதற்கு துணைத்தலைவர் கூறும்போது, 'புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுக்கு 72 நகர சபா உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு மன்ற ஒப்புதல் அளித்தது அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் மாற்றம் செய்ய முடியாது. அடுத்து நடைபெற உள்ள 72 உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் இந்த பிரச்சினை குறித்து பேசி முடிவு செய்யலாம்' என்றார்.

பின்னர் ஆணையாளர் செய்யது உசேன் பேசும்போது, நகர சபா பகுதி உறுப்பினர் நியமனம் குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கையை நகர் மன்றம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார். இதனை தர்ணாவில் ஈடுபட்ட 3 உறுப்பினர்களும் ஏற்க மறுத்து தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கிடையே நகராட்சி கூட்டத்தில் 17 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வை சேர்ந்த புவனேஸ்வரி, சுயேச்சையான கிரிஜா ஆகியோர் கூட்டத்தினை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

அம்மா உணவகம்

தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுதவிர 2 தீர்மானங்கள் தனியாக நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து புஞ்சைபுளியம்பட்டி அம்மா உணவகத்தில் மோசடி நடந்ததாக கூறி உள்பட பல்வேறு விவாதங்கள் நடந்தது.

அப்போது ஆணையாளர் கடை ஏலம் நடைபெறுவதால் அந்த பணியை பார்க்க செல்கிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து நகராட்சி கூட்டம் முடிவடைந்தது.


Next Story