ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சங்கத்தினர் முற்றுகை
ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சங்கத்தினர் முற்றுகை
தாராபுரம்
தாராபுரம் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்ட போது வியாபாரிகள் சங்கத்தினர் பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றம்
தாராபுரம் நகராட்சி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தாராபுரம் கோட்ட செயற்பொறியாளர் கிருஷ்ணமுர்த்தி தலைமையில் கடந்த 6-ந் தேதி முதல் பூக்கடை கார்னர் முதல் சுங்கம் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தாராபுரம் பெரியகடைவீதி, பொள்ளாச்சிரோடு, தாலுகா அலுவலக சாலை, பூங்காசாலை, ஐந்துமுனை சந்திப்பு ஆகிய பகுதிகளில் சாலைப் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் விதமாக சாலையை ஆக்கிரமித்து வணிகவளாகங்கள், கடைகளின் படிக்கட்டுகள் கட்டப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு விபத்துகளும் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் பெரியகடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், தாராபுரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அகலமாக இருந்த சாலையில் ஏராளமான கடைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் அவசர காலத்துக்கு விரைவாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் தாராபுரம் நகர் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகள் இரண்டு நாட்களுக்குள் அகற்றப்படும் என்றனர்.
வியாபாரிகள் எதிர்ப்பு
இந்நிலையில் குறிப்பிட்ட 2 நாட்களில் ஒரு புறம் மட்டுமே ஆக்கிரமிப்புகள் எடுக்கப்பட்டது. 3-வது நாளான நேற்று மறுபுறம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைதுறையினர் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வியாபாரிகள் சங்க தலைவர் ஞானசேகரன் தலைமையில் நகராட்சி 16-வது வார்டு உறுப்பினர் கமலக்கண்ணன் மற்றும் ஏராளமான கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை தடுத்து நிறுத்தி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரதீபிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தாராபுரம் நகராட்சி கடைவீதி பகுதியில் ஆக்கிரமிப்புகளை முன்னறிவிப்பின்றி எடுத்து வருகிறீர்கள்? திடீரென ஆக்கிரப்புகளை இடித்து தள்ளிவிட்டீர்கள். இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளலாம் என கூறி முற்றுகையிட்டனர். இதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு எடுத்துக் கொள்கிறோம் என்று பணியை பாதியில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலை பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டனர்.