மகளை கொன்று நகராட்சி தற்காலிக பெண் ஊழியர் தற்கொலை
நாகையில், சிறையில் கணவர் உள்ளதால் குடும்பத்தில் வறுமை காரணமாக மகளை கொன்று நகராட்சி அலுவலக தற்காலிக பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
நாகையில், சிறையில் கணவர் உள்ளதால் குடும்பத்தில் வறுமை காரணமாக மகளை கொன்று நகராட்சி அலுவலக தற்காலிக பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
சிறையில் கணவா்
நாகை வெளிப்பாளையம் சவேரியார் கோவில் தெரு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ஜம்புகேசவன். இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 30). இவர்களுடைய குழந்தைகள் ரோகித் (11), அப்சனா (9). ஜம்புகேசவன் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் உள்ளார். மகேஸ்வரி நாகை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக களப்பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
கணவர் சிறையில் இருப்பதாலும், தனது வருமானம் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லாததாலும் குடும்பம் வறுமையில் வாடியதால் மகேஸ்வரி கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மகன் ரோகித் அருகில் உள்ள உறவினர் வீட்டிலும், மகள் அப்சனா மகேஸ்வரியுடனும் வசித்து வந்தனர்.
மகளை கொன்று தற்கொலை
நேற்று காலை மகேஸ்வரி நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மகேஸ்வரி தனது மகளை தூக்கில் தொங்கவிட்டு கொன்று அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மகேஸ்வரி, அப்சனா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப வறுமை
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவர் ஜம்புகேசவன் சிறையில் உள்ளதால், மகேஸ்வரியால் அவரது வருமானத்தை மட்டும் வைத்து குடும்பம் நடத்த முடியாததால் மனஉளைச்சலில் மகளை கொன்று அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.
குடும்ப வறுமை காரணமாக இளம்பெண் மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.