பழனி சண்முக நதி கரையில் மின் மயானம்; நகராட்சி கூட்டத்தில் தகவல்


பழனி சண்முக நதி கரையில் மின் மயானம்; நகராட்சி கூட்டத்தில் தகவல்
x

பழனியில் சண்முக நதி கரையில் மின் மயானம் அமைக்கப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல்

பழனி நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம், நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். நகராட்சி துணைத்தலைவர் கந்தசாமி, ஆணையர் கமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏலம் தொடர்பான சில தீர்மானங்கள் ஒத்தி வைக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து கேள்வி நேரத்தில் கவுன்சிலர்கள் பேசினர். அப்போது கவுன்சிலர் பத்மினி (காங்கிரஸ்) கூறும்போது, பழனி நகரில் வசிக்கும் வெளிமாநிலத்தவரின் விவரங்களை நகராட்சி சார்பில் சேகரிக்க வேண்டும் என்றார். அதற்கு, நகராட்சி நிர்வாகத்திற்கு இதற்கான அதிகாரம் இல்லை என்று நகராட்சி தலைவர் கூறினார். பஸ்நிலையத்தில் வ.உ.சி. சிலை வைக்க வேண்டும் என்று கவுன்சிலர் விமலபாண்டியன் (தி.மு.க.) வலியுறுத்தினார். அப்போது தலைவர், சட்டவிதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சண்முகநதி கரையில் மின்மயானம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று கவுன்சிலர் சுரேஷ் (தி.மு.க.) கோரிக்கை வைத்தார். அதற்கு நகராட்சி பொறியாளர் கூறுகையில், விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது என்றார். பின்னர் கவுன்சிலர் காளீஸ்வரி (தி.மு.க.) கூறுகையில், புதிய வீடுகளுக்கான வரிவிதிப்பு தாமதமாகிறது, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு ஆணையர் கமலா பேசுகையில், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பழனி குளத்துரோடு-மதினாநகர் பாதையை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கவுன்சிலர் முருகானந்தம் (அ.தி.மு.க.) கோரிக்கை வைத்தார். அதற்கு, மண் பரிசோதனை நடந்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் கூறினார்.



Next Story