எட்டயபுரத்தில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர்
எட்டயபுரத்தில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தை நேற்று காலையில் பா.ஜ.க.வினர் காலிகுடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆத்திராஜ் தலைமை தாங்கினார். எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் ஒரு மாதத்திற்கு மேலாக நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வழங்க வேண்டும், சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரிடம் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், எட்டயபுரம் பகுதியிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சீராக வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக் கொண்டு பா.ஜ.க.வினர் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தில் பா.ஜ.க. நெசவாளர் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் நாகராஜன், ஒன்றிய தலைவர் சரவணகுமார், பொதுச் செயலாளர்கள் ஹரிஹரசுதன், காளிராஜ், ஆன்மீகப் பிரிவு மாவட்ட செயலாளர் சாய் சிவசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், ஒன்றிய மகளிர் அணி தலைவி கார்த்திகா, இந்து முன்னணி ஜெயச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.