திருமங்கலம் அருகே முனியாண்டி கோவில் விழா: 150 ஆடுகள், 300 கோழிகளை பலியிட்டு பக்தர்களுக்கு பிரியாணி
திருமங்கலம் அருகே நடைபெற்ற முனியாண்டி கோவில் திருவிழாவில் 150 ஆடுகள், 300 கோழிகளை பலியிட்டு பக்தர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே நடைபெற்ற முனியாண்டி கோவில் திருவிழாவில் 150 ஆடுகள், 300 கோழிகளை பலியிட்டு பக்தர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
முனியாண்டி கோவில் விழா
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள முனியாண்டிசுவாமி கோவிலில் ஆண்டு தோறும் பிரியாணி திருவிழா நடைபெறும். இதையொட்டி பக்தர்கள் ஒருவாரம் காப்புக்கட்டி விரதம் மேற்கொள்வர்.
இந்த ஆண்டுக்கான விழா நடந்தது. இதையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு பால் அபிஷேகம், சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
மாலையில் நடைபெற்ற விழாவில் கோவில் நிலைமாலையுடன் கிராம இளைஞர்கள் ஆடி வந்தனர். பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து தேங்காய், பழம், பூத்தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோவிலில் வைத்து, சுவாமிக்கு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர்.
2500 கிலோ பிரியாணி
பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ பிரியாணி தயார் செய்து, படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே அண்டாக்களில் தயாராக வைக்கப்பட்டிருந்த பிரியாணி பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.
கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பிரியாணியை பெற்று சென்றனர்.
இந்த விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் கூறுகையில், முனியாண்டி சுவாமியை வணங்கினால் வேண்டுதல் நிறைவேறும். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள், கோழிகள் பலியிட்டு அசைவ பிரியாணி தயார் செய்து சாதி, மத பேதமில்லாமல் வழங்கப்படுவது சிறப்பானதாகும்்," என்றனர்.