முப்புடாதி அம்மன் கோவில் தேரோட்டம்
சுரண்டை சிவகுருநாதபுரம் முப்புடாதி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
சுரண்டை:
சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி டிரஸ்டுக்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருதல், சிறப்பு பூஜை, மஞ்சள் நீராட்டு விழா, காமராஜர் சிலம்பாட்ட குழுவினரின் சிலம்பாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான நேற்று நடந்தது. இதையொட்டி மாலை 4 மணிக்கு தேர் ரதத்தில் முப்பிடாதி அம்பாள் எழுந்தருளி கிழக்கு ரதவீதி தெற்கு ரதவீதி வழியாக சிவகாமி அம்பாள் சமேத சிவகுருநாதர் கோவிலை வந்து அடைந்தது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு மேல ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் இரவு 7 மணி அளவில் கோவில் வளாகத்தை அடைந்தது. அங்கு தேர் நிலைக்கு நிற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
13-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முப்பிடாதி அம்மன் எழுந்தருளி சிவகுருநாதர் கோவிலுக்கு வந்து சேர்கிறது. அங்கு அம்பாள் ஊஞ்சல் காட்சி மற்றும் விசேஷ பூஜை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை இந்து நாடார் மகமை கமிட்டி டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.