சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை


சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை
x
திருப்பூர்


அவினாசி அருகே சொத்து தகராறில் அண்ணனை அடித்துக்கொன்ற தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சொத்து தகராறு

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி, வேலூர் கருக்கன்காட்டு தோட்டத்தை சேர்ந்த கனகராஜ் மகன் கனகசபாபதி (27). இவரது தம்பி கவியரசு (24). இவர்கள் இருவரும் விவசாய வேலை பார்த்து வந்தனர். இருவருக்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு கவியரசு மற்றும் அவரது நண்பர்கள் நவீன், மூர்த்தி ஆகியோர் கனகசபாபதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டின் கதவு மற்றும் வீட்டை சேதப்படுத்தினர். பின்னர் வீட்டிற்குள் இருந்த கனகசபாபதியை வெளியே இழுத்து வந்து கட்டை மற்றும் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

பரிதாப சாவு

இதில் பலத்த காயம் அடைந்த கனகசபாபதி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கனகசபாபதி நேற்று உயிரிழந்தார்.

இது குறித்து கனகசபாபதியின் மனைவி இந்துமதி கொடுத்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து கவியரசு மற்றும் நவீன் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வத்தனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சொத்துக்காக தம்பியே அண்ணனை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story