புதருக்குள் மர்மமாக இறந்து கிடந்த பெண்


புதருக்குள் மர்மமாக இறந்து கிடந்த பெண்
x
திருப்பூர்


உடுமலை அருகே புதருக்குள் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாடு மேய்க்கச் சென்ற பெண்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சீலக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி நாகவேணி (வயது 50). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

நாகவேணி தனது வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோட்டத்திற்கு தனது மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் வழக்கம் போல் காலை 11 மணியளவில் மதிய உணவை எடுத்துக்கொண்டு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். ஆனால் மாலை 5 மணி ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் காட்டுப்பகுதிக்கு தனது மனைவியை தேடிச்சென்றார். அப்போது மாடுகள் மட்டும் எதிரே வந்தது.

மேலும் அவர் காட்டுக்குள் சென்று தேடிப்பார்த்தபோது அங்குள்ள புதருக்குள் நாகவேணி பிணமாக கிடந்தார். அவரது உடல் செடி, கொடிகளை போட்டு மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

கற்பழித்து கொலையா?

நாகவேணியின் முகத்தில் காயங்கள் இருந்துள்ளது. அவர் கொண்டு வந்த சாப்பாடு கூடை மற்றும் பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளது. தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

சம்பவம் நடந்த இடம் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் இந்த வழக்கு குடிமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பிணமாக கிடந்த நாகவேணி கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தனிப்படை போலீஸ் விசாரணை

நாகவேணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள தோட்டத்துச்சாளைகள், வடமாநில தொழிலாளர்கள், மர்ம ஆசாமிகள் நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்ற பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story