மனைவியை அம்மிக்கல்லால் அடித்துக்கொல்ல முயற்சி
மடத்துக்குளம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தலையில் அம்மிக்கல்லைப்போட்டு கொலை செய்ய முயற்சி செய்த வட மாநிலத்தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மனைவி நடத்தையில் சந்தேகம்
உடுமலையை அடுத்த பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் பாரதி. இவர் மடத்துக்குளத்தை அடுத்த பாப்பான்குளம் பகுதியில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கோழிப் பண்ணையில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த நூர்தீன் ஷேக் (வயது 36) என்பவர் தனது மனைவி ரக்ஷிதா என்பவருடன் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நூர்தீன் ஷேக் உடல்நிலை சரியில்லாததால் சொந்த மாநிலத்திற்கு திரும்பிச் சென்றுள்ளார்.
ரக்ஷிதா தொடர்ந்து கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மேற்கு வங்கத்திற்குச் சென்ற நூர்தீன் ஷேக் மீண்டும் கோழிப்பண்ணைக்குத் திரும்பி வந்துள்ளார். மேலும் மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அம்மிக்கல்லால் தாக்கினார்
இதனையடுத்து சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது நூர்தீன் ஷேக் அம்மிக்கல்லால் ரக்ஷிதாவின் தலையில் பலமாக தாக்கி கொலை செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ரக்ஷிதாவின் அலறல் சத்தம் கேட்டு கோழிப்பண்ணை மேனேஜர் பைஜூ மற்றும் உரிமையாளர் சங்கர் பாரதி ஆகியோர் விரைந்து சென்று பார்த்த போது ரக்ஷிதா தலையில் பலத்த காயத்துடன் மயங்கிக்கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் நூர்தீன் ஷேக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.