இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொல்ல முயன்ற காதலன்


இளம்பெண்  மீது  பெட்ரோல்  ஊற்றி  உயிரோடு  எரித்து  கொல்ல  முயன்ற  காதலன்
x
தினத்தந்தி 4 Jan 2023 10:45 PM IST (Updated: 5 Jan 2023 10:45 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம் பெண்ணை காட்டுக்கு அழைத்து சென்ற காதலன் அவர் மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனப்பாளையம் பகுதியில் பெத்தாம்பாளையம் ரோட்டில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று மாலை உடலில் தீக்காயங்களுடன் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் அலறியடித்து " தன் மீது பெட்ரோல் ஊற்றி ஒருவர் தீ வைத்து விட்டதாகவும், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்" என கூறியடி பிரதான சாலைக்கு ஓடி வந்தார். இதை பார்த்து அந்த வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு தீ வைத்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றபோது அந்த வாலிபரும் கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

பல்லடம் அரசு மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த சம்பவம் குறித்து ேபாலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

எரித்து கொல்ல முயற்சி

விசாரணையில் வடமாநிலத்தைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் பூஜா (வயது 19). பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் அவரது உறவினர் இப்ராகிம் என்பவர் வீட்டில் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். வேலைக்குச் சென்ற இடத்தில் ராயர்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரது மகன் லோகேஷ் (22) என்பவருடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பூஜா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி லோகேசை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து நேற்று இருவரும் பல்லடம் பனப்பாளையம் பகுதியில் பெத்தாம்பாளையம் ரோட்டில், சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்த லோகேஷ் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பெட்ரோலை பூஜா மீது ஊற்றி தீ வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பூஜாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதுபோல் லோகேஷ் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

பல்லடத்தில் இளம் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உயிரோடு எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூரில் சிகிச்சை பெற்று வரும் வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story